"யூத பாரம்பரியத்தில் திருமுழுக்கு"
பெயர்:
 • யூதர்கள் திருமுழுக்கை, எபிரேய மொழியில் மிக்குவா (MIKVEH) என்று அழைத்தார்கள்.
 • இதற்கு தண்ணீரை சேகரிப்பது என்று பொருள் - தொ.நூ 1:10.

 • நோக்கம்:
 • தூய்மையாக்குதல் என்பது, திருமுழுக்கின் நோக்கம்.
 • கடவுள் பரிசுத்தராயிருப்பது போல், அவருடைய மக்களும், பரிசுத்தராயிருக்க வேண்டும் - லேவி 19:2, 11:45, 21,6-8, 1பேது 1:16.
 • இந்த தூய்மையாக்குதல், மிக்குவா வழியாக நடந்தது.

 • வரலாறு:
 • இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு சற்று முன், எஸ்ஸன்ஸ் (ESSENES) என்னும், ஒரு யூத பிரிவினர், பிரபலமாக இருந்தார்கள்.
 • இவர்கள் பரிசேயர்களைப் போலவே, யூத மறையிலும், திருச்சட்டத்திலும், அதிக பற்றுள்ளவர்களாக இருந்தார்கள்.
 • யாவே கடவுள், பரிசுத்தராயிருப்பது போல, அவருடைய மக்களும், பரிசுத்தராயிருக்க வேண்டும் என்ற, கடவுளின் விருப்பத்தை, எஸ்ஸன்ஸ் குழுவினர், மிக ஆர்வமாக கடைபிடித்தார்கள்.
 • எனவே, மிக்குவா மூலமாக, தங்களைத் தூய்மைப்படுத்துவது பற்றி, பல ஒழுங்குமுறைகளை வகுத்திருந்தார்கள்.

 • சில நிபந்தனைகள்:
 • மிக்குவாவிற்கு, தண்ணீரைத் தவிர, வேறு எந்த திரவங்களும் பயன்படுத்தக் கூடாது.
 • தண்ணீர்த் தொட்டி, நிலத்தில் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும்.
 • தண்ணீர் மொண்டு ஊற்றப்படாமல், தொட்டிக்குள் பாய்ந்து வருவதாக இருக்க வேண்டும்.
 • குறிப்பாக, ஆற்று நீரோ, கடல் நீரோ இரு;பபது நலம்.
 • நீர்த்தொட்டியில், தண்ணீரின் அளவு, ஒரு ஆள் அமர்ந்து, முழுமையாக மூழ்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
 • மூன்று வித மிக்குவா:

  1. “ரிஷமா” திருமுழுக்கு (RISHAMA BAPTISM):
 • இந்த திருமுழுக்கிற்கு உடன் குருக்களோ, பிறரோ தேவையில்லை.
 • அவரவர் தாமே, இந்த திருமுழுக்கை பெற்றுக்கொள்ளலாம்.
 • இந்த திருமுழுக்கை, தினமும் அதிகாலையில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

 • திருமுழுக்கு முறை:
 • தண்ணீரில் முழுமையாக மூழ்கி எழுந்து, திருமுழுக்குப் பெற வேண்டும்.
 • மூழ்கி எழும் வேளையில், தலையை துணியால் மூடியிருக்க வேண்டும்.

 • 2. “தமஷா” திருமுழுக்கு (THAMASHA BAPTISM):
 • இந்த திருமுழுக்கும், பிறர் உதவியில்லாமல், தாமாகவே பெற்றுக்கொள்ள வேண்டியது.
 • ஆற்றில் மூன்று முறை முழுமையாக மூழ்கி எழுதல் வேண்டும்.

 • எந்தப் பின்னணியில் இந்த திருமுழுக்கு:
 • பெண்கள், குழந்தைப் பேற்றுக்கு பின்பு.
 • பெண்கள், மாதவிடாய்க்கு பின்பு.
 • கணவன் மனைவி, சரீர உறவுக்கு பின்பு.
 • தீட்டான பொருள்களை தொட்ட பின்பு.

 • 3. “மஸ்புதா” திருமுழுக்கு (MASPUTHA BAPTISM):
 • இது முழுமையான திருமுழுக்கு என்று அறியப்படுகிறது.
 • இந்தத் திருமுழுக்கு, குருக்களால் நிறைவேற்றப்படுகிறது.
 • வாரத்தின் முதல் நாள், இது நடைபெறும்.
 • பிற இனத்தவரை, யூத மறையில் சேர்ப்பதாகவும், கொடிய பாவங்கள் செய்தவர்களை , பரிசுத்தப்படுத்தும் சடங்கில் ஒரு பாகமாகவும், இது அமையும்.
 • இந்த திருமுழுக்கு, ஆற்றில் வைத்து நடைபெறும்.
 • ஆலயமும் திருமுழுக்குத் தொட்டிகளும்:
 • ஆலயத்தைச் சுற்றி, பல்வேறு இடங்களில், தண்ணீர் நிறைந்த திருமுழுக்குத் தொட்டிகள், எப்போதும் இருக்கும்.
 • குறிப்பாக, ஏரோதின் ஆலயத்தைச் சுற்றி, இவ்வாறு இருந்ததாகக் காண்கிறோம்.

 • திருமுழுக்கின் பல்வேறு முறைகள்:
 • திருமுழுக்குப் பெறுபவர், தன் உடலை, முன்னதாகவே சுத்தம் செய்ய வேண்டும்.
 • குறிப்பாக, நகங்களை வெட்டுதல், முடியை சுத்தம் பண்ணுதல், வாயை சுத்தம் பண்ணுதல், உடையை சுத்தம் பண்ணுதல் போன்றவை.
 • திருமுழுக்கு கொடுப்பவருக்கு முன்பாக, திருமுழுக்கு கொடுப்பவர் விசுவாச அறிக்கை செய்ய வேண்டும்.
 • பின்பு, திருமுழுக்குப் பெறுபவர், தண்ணீருக்குள் நேராக நிற்க வேண்டும்.
 • அப்படியே, தண்ணீருக்குள், தரையில் தண்ணீர் முழுமையாக மூழ்கும்படி அமர்ந்து கொள்ள வேண்டும்.
 • ராபீக்களின் திருமுழுக்கைப் பற்றிய சில பாடங்கள்:
  1. முதல் பாடம்:
 • திருமுழுக்கு என்பது, மூழ்கி எழுதல் என்னும் பொருளோடேயே சொல்லப்படுகிறது.
 • இந்த மூழ்கி எழுதல் சடங்கின் போது, ஸ்தோத்திர துதி ஜெபங்கள், எழும்பிக் கொண்டிருக்கும்.
 • மூழ்குகிறவர், தோராவின் சட்டங்களை முழுமையாக ஏற்று வாழ்வதாக அறிக்கையிடுவார் - இ.ச 29:9-14.

 • “எனவே இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை கடைபிடிப்பதில் கருத்தாயிருங்கள். அப்போது நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும், நீங்கள் நிறைவு பெறுவீர்கள்” - இ.ச 29:9.

  “இன்று நீங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கிறீர்கள். உங்கள் குலங்களின் தலைவர்களும், உங்கள் பெரியோர்களும், உங்கள் அலுவலர்களும், இஸ்ராயேலின் ஆடவர் ஏனையோரும், உங்கள் சிறுவரும், உங்கள் மனைவியரும், உங்கள் பாளையத்தில் உங்களோடுள்ள அன்னியராகிய விறகுவெட்டியும், தண்ணீர் சுமப்பவனுமாகிய ஆகிய எல்லோரும் நிற்கிறீர்கள்” - இ.ச 29:10,11.

  “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் மூதாதையருக்கு, உங்கள் கடவுளாகிய ஆண்டவர், ஆணையிட்டுச் சொன்னது போலவும், அவர் உங்களுக்கு வாக்களித்தது போலவும், அவர் இன்று உங்களை தம் சொந்த மக்களாக நிலைநிறுத்தி, உங்கள் கடவுளாக இருக்குமாறும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர், இன்று உங்களோடு செய்யப் போகின்ற, அவர் தம் உடன்படிக்கையிலும், வாக்குறுதியிலும், பங்கு கொள்ளுமாறும், நீங்கள் நிற்கிறீர்கள்” - இ.ச 29:12,13.

 • இந்த அறிக்கையால், மனம் திரும்புபவர், தன்னுடைய பழைய வாழ்க்கையை களைந்து, கடவுளுக்கு விருப்பமான, ஒரு புது வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதாக வெளிப்படுத்துவார்.
 • இது வரையிலும், தாம் யாராக இருந்தார் என்றும், இனிமேல் தாம் யாராக இருக்கப் போகிறார் என்றும் உணர்ந்து கொள்வார்.
 • 2. பாடம் - இரண்டு
  “மூன்று முறை மூழ்குதல்”:

 • திருமுழுக்குப் பெறுபவர், மூன்று முறை, தண்ணீருக்குள் மூழ்கி எழும்ப வேண்டும்.
 • இவ்வாறு செய்வது, முழுமையான திருமுழுக்கு என்று அறியப்படுகிறது.
 • மேலும் மிக்குவா என்ற வார்த்தை, தோராவில் மூன்று முறை சொல்லப்படுவதால், மூன்று முறை தண்ணீரில் மூழ்கி எழும் பழக்கம் வந்ததாகவும் கூறுவர்.

 • 3. பாடம் - மூன்று
  “பெயரால் மூழ்குதல்”:

 • பொதுவாக, திருமுழுக்குச் சடங்கில், திருமுழுக்கு அளிப்பவர் இருக்க வேண்டும்.
 • புதிய ஏற்பாட்டில், “பெயரால்” திருமுழுக்கு என்பது, இந்த பின்னணியில் இருந்து தான் வந்தது.
 • “பவுலா உங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டான். அல்லது பவுலின் பெயரிலா, நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்” – 1கொரி 1:13.

  “ஆகவே என் பெயரால் திருமுழுக்குப் பெற்றதாக, யாரும் சொல்ல முடியாது” – 1கொரி 1:15.

  “யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம், எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா? என்று அவர் கேட்டார். அவர்கள், விண்ணகத்திலிருந்து வந்தது என்போமானால், பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை எனக் கேட்பார்” - மத் 21:25.

  “யோவான் திருமுழுக்கு கொடுத்து வந்த காலம் முதல், ஆண்டவர் இயேசு, நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை, அவர் நம்மோடு இருந்திருக்க வேண்டும்” – தி.ப 1:22.

  “அவ்வாறெனில், நீங்கள் எந்த திருமுழுக்கைப் பெற்றீர்கள், எனப் பவுல் கேட்க, அவர்கள், “நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்” என்றார்கள்” – தி.ப 19:3.

 • இங்கே திருமுழுக்கிற்கு தலைமை தாங்குபவர், முக்கியமாக கருதப்படுகிறார்.
 • 4. பாடம் - நான்கு
  “கழுவுதல்”:

 • திருமுழுக்கால் வரும் கழுவுதல், ஓர் ஆன்மீக கழுவுதலாகப் பொருள் கொண்டாலும், உடல் கழுவுதலை, ராபீக்கள் மிகுந்த ஒழுங்கு முறையோடு செய்தார்கள்.
 • தண்ணீரில் மூழ்கும் போது, அது உடலின் எல்லா பாகங்களும் நனைவதாக அமைய வேண்டும்.
 • எனவே, ஆடைகளைக் களைந்து மூழ்கும் வழக்கம் பிரபலமாக இருந்தது.
 • மூழ்கி எழுபவர், முழுமையாக பரிசுத்தமடைகிறார் என்று கருதப்பட்டது.
 • 5. பாடம் - ஐந்து
  “புதுப்பிறப்பு”:

 • தண்ணீர் நிரம்பிய தொட்டி என்பது, இந்த உலகத்தின் வயிறு என்று கருதப்பட்டது.
 • இந்த தொட்டியில் மூழ்கி வெளிவே வருபவர் ஒரு புதிய பிறப்படைந்து, புதிய உலகத்திற்கு வருகிறார்.
 • இதனை, யூர்கள் “புதுப்பிறப்பு”, “மறுபடியும் பிறப்பு”, “கடவுளுக்குள் பிறப்பு”, “மீண்டும் குழந்தையாதல்” என்று, பல பெயர்களில் அழைத்தனர்.
 • 6. பாடம் - ஆறு
  “தூய்மைப்படுத்தல்” :

 • பிற இனத்தவர், யூதர்களாக மனம் மாறும் திருமுழுக்கு நடைபெறும் போது, அந்த நிகழ்ச்சிக்கு, தலைமை சங்கத்தின் இருவர் கூட, சாட்சியாக இருக்க வேண்டும்.
 • உடல் தூய்மையாவதற்கு முன், மனஸ்தாபத்தாலும், பாவ அறிக்கையாலும், ஒருவர் தம் மனதை, தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
 • பொதுவாக, எல்லா மூழ்குதல் சடங்குகளிலும் வெளிப்பட வேண்டிய மாற்றம்:
 • 1. உள்ளத்தூய்மை
  2. சிலைகளை விட்டு, கடவுளிடம் திரும்பும் தீர்மானம்.
  3. மனஸ்தாபமும் - பாவ அறிக்கையும்.
  4. திருச்சட்டத்திற்கு கட்டுப்படுதல்.
  5. புதுப்பிறப்பின் அனுபவம்
  "புதிய ஏற்பாட்டில் திருமுழுக்கு:"
  முகவுரை:
 • புதிய ஏற்பாட்டின் தொடக்க காலத்திலேயே, திருமுழுக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
 • சில புதிய ஏற்பாட்டு வசனங்களை, கீழே காண்போம்.
 • ஒருவர் தண்ணீரினாலும், தூய ஆவியினாலும் பிறந்தாலன்றி, இறை ஆட்சிக்கு உட்பட இயலாது, என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன் - யோவா 3:5.
  கிறிஸ்து, திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காக தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும், நீரினாலும், அதனைக் கழுவி, தூயதாக்குமாறு, இவ்வாறு செய்தார் - எபே 5:25,26.
  சிலர், அதாவது, எட்டுபேர் மட்டும், அந்தப் பேழையில் தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். அந்த தண்ணீரானது, திருமுழுக்கிற்கு முன் அடையாளமாகும். இத்திருமுழுக்கு, உடலின் அழுக்கைப் போக்கும் செயலல்ல. அது குற்றமற்ற மனச்சான்றுடன் , கடவுளுக்குத் தரும் வாக்குறுதி ஆகும். அது, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக, இப்போது உங்களுக்கு மீட்பளிக்கிறது – 1பேது 3:20,21.
  நீங்கள் திருமுழுக்குப் பெற்ற போது, இயேசுவோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த, கடவுளின் ஆற்றல் மீது, கொண்டுள்ள நம்பிக்கையால், அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள் - கொலோ 2:12.
  திருமுழுக்கின் அடையாளங்கள்:
  1. பழைய இயல்பின் இறப்பு – உரோ 6:3-11.
  2. மனிதனின் குற்றக்கறையை கழுவுதல் - உரோ 5:12,18.
  3. கடவுளின் தண்டனைத் தீர்ப்பிலிருந்து மீட்பு – உரோ 5:9,10.
  4. மீட்பளித்து கடவுளின் பிள்ளைகளாக்குவது – கலா 4:4,5.
  5. கிறிஸ்துவோடு இணைந்து வாழ வைக்கிறது – தி.ப 9:1-6, கொலோ 3:3,4.
  பவுலின் திருமுகங்களில் திருமுழுக்கு:
 • திருமுழுக்கால், விசுவாசி இயேசு கிறிஸ்துவின் இறப்பு, உயிர்ப்பில் பங்கு கொள்கிறார் - உரோ 6:3,4.
 • தம் பாவங்களிலிருந்து விடுதலை பெறுகிறார் - 1கொரி 6:11.
 • கிறிஸ்துவின் மறை உடலில் தம்மை இணைத்துக் கொள்கிறார் - 1கொரி 12:13
 • மத்தேயு நற்செய்தியில் திருமுழுக்கு:

  மத் 28:18-20:

  “இயேசு அவர்களை அணுகி, விண்ணுலகிலும், மண்ணுலகிலும், அனைத்து அதிகாரமும், எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய், எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும், அவர்களும் கடைபிடிக்கும்படி, கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை, எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் என்று கூறினார்” .


  மையக்கட்டளை – “திருமுழுக்கு”:
 • இயேசுவின் இந்த இறுதிக் கட்டளையோடு, மத்தேயு நற்செய்தி முடிகிறது.
 • மத்தேயு, தன் முழு நற்செய்திக்கும், இந்த வசனங்களை சிகரமாக வைத்தார்.
 • போதிப்பது, சீடராக்குவது, கற்பிப்பது என அனைத்து ஊழியக்கடமைகளையும், இயேசு தம் சீடருக்கு இங்கே தருகிறார்.
 • ஆனால், இக்கட்டளைகளையெல்லாம் பிணைக்கும், மையக்கட்டளையாக திருமுழுக்கை வைத்தார்.
 • திருமுழுக்கு என்னும் அருள்கொடை மூலம், இயேசு தம் திருச்சபையை இங்கே ஈன்றெடுக்கிறார்.
 • தனக்குப் பின், ஆயிரமாயிரம் ஆண்டுகள், திருச்சபைகள் பிறந்து வளரும் வழியை, இயேசு இங்கே திறந்து வைத்தார்.
 • மாற்கு நற்செய்தியில் திருமுழுக்கு:

  மாற்கு 16:15-18:

  “இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு, திருமுழுக்குப் பெறுவோர், மீட்பு பெறுவர். நம்பிக்கையற்றவரோ, தண்டனைத் தீர்ப்பு பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களை செய்வர். அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர். புதிய மொழிகளைப் பேசுவர். பாம்புகளை தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும், அது அவர்களுக்கு தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர் மீது, கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்”.


  விசுவசித்து திருமுழுக்கு:
 • மாற்கு நற்செய்தியில் இந்தப் பகுதி, ஒரு பிற்சேர்க்கையாக கருதப்பட்டாலும், திருமுழுக்கைப் பொறுத்தவரையில், ஆதி ஆவிக்குரிய சபைக்கு, அந்த வசனங்கள் நல்ல ஒரு படிப்பினையைத் தந்தது.
 • இங்கே திருமுழுக்கும், அபிஷேக அனுபவமும், இணைத்து கூறப்படுகிறது.
 • நற்செய்தி அறிவிப்பு, விசுவசித்து ஏற்பது, திருமுழுக்குப் பெறுவது, மீட்பை அடைவது, என பல கருத்துக்கள் இங்கே கூறப்படுகின்றன.
 • மனம் திரும்பி, பாவ மன்னிப்பு பெற்று, மீட்படைவது என்ற நற்செய்தி போதிக்கப்படும் போது, அதைக் கேட்பவர், அறிவிக்கப்பட்ட சத்தியங்களை, விசுவசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 • இவ்வாறு, சத்தியங்களை விசுவசித்து ஏற்றுக்கொண்டவர்களை, திருச்சபை திருமுழுக்கால் மீட்புக்கு அழைத்துச் செல்கிறது.
 • பைபிள் திருச்சபையில், மீட்பும் அருட்பொழிவும், இணைந்த அனுபவங்களாகவே, ஒரு விசுவாசி பெற்றுக்கொண்டார்.
 • அங்கே, திருமுழுக்கால் திருச்சபையோடு இணைக்கப்படும் அனுபவத்தையும், விசுவாசி பெற்றுக்கொள்கிறார்.
 • இவ்வாறு, மீட்படைந்து, அருட்பொழிவு பெற்ற, விசுவாசிகளின் கூட்டம் ஒன்று, திருமுழுக்கால் திருச்சபையாக, பிறப்பெடுத்து மலர்ந்தது.
 • லூக்கா நற்செய்தியில் திருமுழுக்கு:
  லூக்கா 24:45-49.

  “அப்போது, மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு, அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், “மெசியா துன்புற்று இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவ மன்னிப்பு பெற, மனம் மாறுங்கள் என, எருசலேம் தொடங்கி, அனைத்து நாடுகளிலும், அவருடைய பெயரால், பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்;சிகள். இதோ! என் தந்தை வாக்களித்த வல்லமையை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும், அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும் வரை, இந்நகரத்திலேயே இருங்கள்” என்றார்.

 • லூக்காவும், தன்னுடைய நற்செய்தியை முடிக்கும் போது, இரட்சிப்பு அபிஷேகத்தை வலியுறுத்தி முடிக்கிறார்.
 • லூக்காவின் நற்செய்தி, பிந்திய நாட்களில் எழுதப்பட்டதால், எல்லாருக்கும் பழக்கத்தில் இருந்து வந்த, திருமுழுக்கைப் பற்றி, இந்தப் பகுதியில் அவர் சொல்லாமல் விட்டிருக்கலாம்.
 • ஆனால், தம்முடைய திருத்தூதர்பணியில், ஆதி ஆவிக்குரிய சபையில் திருமுழுக்கு முக்கியமாகக் கருதப்பட்டதை, அவர் எடுத்துக்காட்டுகிறார்.
 • இங்கே, மனம் மாற்றத்தால் வரும் பாவ மன்னிப்பையும், லூக் 1:77 – ல், பாவ மன்னிப்பால் வரும் மீட்பையும், லூக்கா குறிப்பிடுகிறார்.
 • எனவே, லூக்கா நற்செய்தியின் படி, திருச்சபையின் வளர்ச்சியில், மனம் திரும்புதலால் பாவமன்னிப்பும், பாவமன்னிப்பால் மீட்பும், விசுவாசிகளுக்கு அளிப்பது, திருச்சபையின் அஸ்திவார ஊழியமாக இருந்தது.
 • இங்கே திருமுழுக்கு சடங்கால், விசுவாசம் உறுதிப்படுத்தப்பட்டது.
 • யோவான் நற்செய்தியில் திருமுழுக்கு:
  யோவா 1:24-28, 3:22,23, 10:40,41:

  “பரியேர்களால் அனுப்பப்பட்ட அவர்கள், அவரிடம், “நீர் மெசியாவோ, எலியாவோ, வர வேண்டிய இறைவாக்கினரோ அல்ல என்றால், ஏன் திருமுழுக்கு கொடுக்கிறீர்” என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம்,

  “நான் தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர், உங்களிடையே நிற்கிறார். அவர் எனக்குப் பின் வருபவர். அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக் கூட, எனக்கு தகுதியில்லை” என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நடந்தன. அங்கு தான், யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்” – யோவா 1:24-28.

  “இவற்றுக்குப் பின்பு, இயேசுவும் அவர்தம் சீடரும், யூதேயப் பகுதிக்கு சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கி, திருமுழுக்கு கொடுத்து வந்தார். யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகிலுள்ள அயினோனில் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில், அங்கு தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று, திருமுழுக்குப் பெற்று வந்தார்கள்” – யோவா 3:22,23.

  “யோர்தானுக்குப் அப்பால், யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்து வந்த இடத்திற்கு, இயேசு மீண்டும் சென்று, அங்கு தங்கினார். பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், “யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை. ஆனால் அவர் இவரைப்பற்றி சொன்னதெல்லாம் உண்மையாயிற்று” என பேசிக்கொண்டனர்” – யோவா 10:40,41.


  திருமுழுக்கு யோவான், இயேசு - இவர்களின் திருமுழுக்கு:
 • யோவான் தன் நற்செய்தியில், திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கைக் குறித்து, விரிவாகக் கூறுகிறார்.
 • திருமுழுக்கு யோவான், யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு அளித்து வந்தார்.
 • அவர் தண்ணீரால் திருமுழுக்கு அளித்தார். அந்த திருமுழுக்கு உரையாடலில், தனக்குப் பின் வரும், இயேசுவைக் குறித்தும் அவர் பேசினார்.
 • மேலும், யோவானும் இயேசுவும், தம் சீடர்களோடு, திருமுழுக்குக் கொடுக்கும் பணியை செய்து வந்தார்கள் என்பதை, இங்கே மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்.
 • யோவான் திருமுழுக்கு கொடுத்த இடத்தில், தண்ணீர் நிறைய இருந்தது என்பதையும் குறிப்பிடுகிறார்.
 • யோவானின் பணியில், திருமுழுக்கு அளித்தது தான், சிறப்பானதாக கருதப்பட்டது.
 • அவர் புதுமைகள் எதுவும் செய்யாவிடினும், தம் திருமுழுக்குப் பணியால் புகழ் பெற்றார்.
 • எனவே, அவர் திருமுழுக்கு யோவான் என்று அழைக்கப்பட்டார்.

 • யோவான் 3:2-9:

  “இயேசு அவரைப் பார்த்து, “மறுபடியும் பிறந்தாலன்றி, எவரும் இறையாட்சியைக் காண இயலாது என, மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்” என்றார். நிக்கதேம், அவரை நோக்கி, “வயதான பின் ஒருவர் எப்படி பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து, பிறக்க முடியுமா? என்று கேட்டார்”. இயேசு அவரைப் பார்த்து,

  “ஒருவர் தண்ணீராலும், தூய ஆவியாலும் பிறந்தாலன்றி, இறையாட்சிக்கு உட்பட இயலாது, என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர், மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர், தூய ஆவியின் இயல்பை உடையவர். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று, நான் உமக்குக் கூறியது பற்றி, நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும், எங்கு செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” என்றார்.

 • அனைவரும் மறுபடியும் பிறக்க வேண்டுமென்பது, இயேசு நிக்கதேமுக்குக் கொடுத்த போதனை.
 • ஆனால், அந்த மறுபடியும் பிறப்பு, ஆவியாலும், தண்ணீராலும் நடைபெற வேண்டுமென்று, யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
 • இங்கே, தண்ணீரால் பிறப்பது என்பது, ஒருவரை சபையோடு ஐக்கியப்படுத்தும், தண்ணீர் திருமுழுக்கு என்றும், ஆவியில் பிறப்பது என்பது, ஒருவரை கடவுளோடு ஐக்கியப்படுத்தும், ஆவியில் திருமுழுக்கு என்பதும் விளங்குகிறது.
 • யோவான் 1:29-34:

  “மறுநாள், இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!. ஆட்டுக்குட்டியாம் இவரே, உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப் பின் வரும் இவர், என்னை விட முன்னிடம் பெற்றவர். ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று, நான் இவரைப் பற்றியே சொன்னேன். இவர் யார் என்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ராயேல் மக்களுக்கு, இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன். தண்ணீரால் திருமுழுக்கு கொடுத்தும் வருகிறேன்” என்றார்.

  “தொடர்ந்து யோவான் சான்றாக கூறியது: “தூய ஆவி, புறாவைப் போல, வானிலிருந்து இறங்கி, இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவர் யார் என்று, எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால், தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி, என்னை அனுப்பியவர், “தூய ஆவி இறங்கி யார் மீது இருப்பதைக் காண்பீரோ, அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்” என்று என்னிடம் சொல்லியிருந்தார. நானும் கண்டேன். இவரே இறைமகன் என, சான்றும் கூறி வருகிறேன்.


 • இயேசு கிறிஸ்துவை, மெசியா என்று அறிமுகப்படுத்துவதில், யோவான் கண்ணும் கருத்துமாயிருந்தார்.
 • தன்னையும், இயேசுவையும் ஒப்பிட்டுப் பேசுகையில், அங்கே திருமுழுக்கை அடிப்படையாக வைத்தே, பேசினார்.
 • தான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுப்பவர் என்றும், இயேசு தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் என்றும், இயேசுவை யோவான் திருமுழுக்கை வைத்தே அறிமுகப்படுத்துகிறார்.
 • யோவான், தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தது, கடவுளுடைய கட்டளை என்றும், அவரே தன்னை தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்க அனுப்பினார் என்றும், திருமுழுக்கு யோவான், தன்னைப் பற்றி சான்று பகர்ந்தார்.

 • யோவான் 3:25-30:

  “ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும், யூதர் ஒருவருக்கும் இடையே, தூய்மைச் சடங்கு பற்றி, விவாதம் எழுந்தது. அவர்கள் யோவானிடம் போய், “ரபீ, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்தே சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்” என்றார்கள். யோவான் அவர்களைப் பார்த்து, “விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால், எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. நான் மெசியா அல்ல, மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்;டவன் என்று, நான் கூறியதற்கு, நீங்களே சாட்சிகள். அவரது செல்வாக்கு பெருக வேண்டும், எனது செல்வாக்கு குறைய வேண்டும்” என்றார்.

 • யோவானின் சீடர்கள், இயேசுவைப் பற்றி யோவானிடம் பேசிய போது, இயேசு திருமுழுக்குக் கொடுக்கிறார் என்பதை, யோவானுக்குக் கூறினார்கள்.
 • ஆனால் யோவான், அந்த திருமுழுக்கு, விண்ணிலிருந்து அருளப்படுவது என்று, 27 – ம் வசனத்தில் கூறினார்.
 • இன்னுமாய், திருமுழுக்கு அளிக்கும், இயேசுவின் செல்வாக்கு உயர வேண்டும் என்று, யோவான் வாழ்த்தினார்.

 • யோவான் 4:1-3:

  “யோவானைவிட, இயேசு மிகுதியான சீடர்களை சேர்த்துக்கொண்டு, திருமுழுக்கு கொடுத்து வருகிறார் என்று, பரிசேயர்கள் கேள்வியுற்றனர். இதை அறிந்த இயேசு, யூதேயாவை விட்டகன்று, மீண்டும் கலிலேயாவுக்குச் சென்றார். ஆனால், உண்மையில் திருமுழுக்குக் கொடுத்தவர், இயேசு அல்ல, அவருடைய சீடர்களே.

 • பரிசேயரிடத்தில் இயேசுவைப் பற்றி, மக்கள் கூறிய போது, இயேசு மக்களைக் கூட்டி, திருமுழுக்கு அளிக்கிறார் என்று கூறினர்.
 • ஆனால், நற்செய்தியாளர் யோவான், அதை எழுதும் போது, இயேசு திருமுழுக்குக் கொடுக்கவில்லை என்றும், இயேசுவின் சீடர்கள் தான், திருமுழுக்குக் கொடுத்தார்கள் என்றும், விளக்கமளித்தார்.

 • திருத்தூதர்பணியில் திருமுழுக்கு:
  தி.ப 2:41 – திருத்தூதர் பேதுரு:

  “அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள், திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர், அவர்களோடு சேர்க்கப்பட்டனர்”.

 • முதல் பெந்தக்கோஸ்து பொழிதலின் போது, சூழ்ந்து நின்ற விசுவாசிகளுக்கு, பேதுரு, தன் முதல் ஆவிக்குரிய பேருரையை ஆற்றினார்.
 • இந்த பேருரையில், விசுவாசிகள் ஏற்றுக்கொண்டு, கடைபிடிக்க வேண்டிய அனேக விசுவாச சத்தியங்களை, பேதுரு கூறினார்.
 • அந்த சத்தியங்களை ஏற்றுக்கொண்டவர்கள், திருமுழுக்குப் பெற்று, ஆவிக்குரிய சபையில், சேர்ந்து கொண்டார்கள்.
 • அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர், சபையில் சேர்ந்து கொண்டதாக வாசிக்கிறோம்.

 • தி.ப 8:12,13 – திருத்தொண்டர் பிலிப்பு:

  “ஆயினும், இறையாட்சியையும், இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரையும் பற்றிய, நற்செய்தியை பிலிப்பு அறிவித்த போது, பல ஆண்களும் பெண்களும், நம்பிக்கை கொண்டு, திருமுழுக்குப் பெற்றார்கள். சீமோனும் நம்பிக்கை கொண்டவனாய் திருமுழுக்குப் பெற்று, பிலிப்புடன் கூடவே இருந்தான் . அவர் செய்த, அரும் அடையாளங்களையும், வல்ல செயல்களையும் கண்டு, மலைத்து நின்றான்”.

 • சமாரியாவில், பிலிப்பு நற்செய்தி அறிவித்தார்.
 • அவருடைய நற்செய்தியை, அனேக ஆண்களும் பெண்களும் ஏற்று, விசுவாசம் கொண்டனர்.
 • அவர்கள் அனைவரும் திருமுழுக்குப் பெற்று, ஆதி ஆவிக்குரிய சபையில் சேர்;ந்து கொண்டனர்.
 • மாய வித்தைக்காரனான சீமோனும், பிலிப்பு கூறிய சத்தியங்களை ஏற்று, விசுவசித்து, திருமுழுக்குப் பெற்று, சபையில் சேர்ந்து கொண்டான்.
 • தி.ப 8:26-40:

  “அவர்கள் போய்க்கொண்டிருந்த போது, வழியில் தண்ணீர் இருந்த, ஓர் இடத்திற்கு வந்தார்கள். அப்போது அவர், “இதோ தண்ணீர் உள்ளதே! நான் திருமுழுக்குப் பெற ஏதாவது தடை உண்டா?” என்று கேட்டார். உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்கு திருமுழுக்கு கொடுத்தார். அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறின உடனேயே, ஆண்டவரின் ஆவியார், பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர் அதன் பின் அவரைக் காணவில்லை. அவர் மகிழ்;ச்சியோடு, தம் வழியே சென்றார். பின்பு பிலிப்பு, ஆசோத்து என்னும் இடத்தில் காணப்பட்டார். செசரியா போய் சேரும்வரை, அவர் சென்ற நகரங்களிலெல்லாம், நற்செய்தியை அறிவித்தார்” – தி.ப 8:36-40.

 • எத்தியோப்பிய நிதியமைச்சருக்கு, நற்செய்தி அறிவிக்கும் படியாக, ஆவியானவர் பிலிப்புவைத் தூண்டினார்.
 • பிலிப்பு, ஏசாயாவில் எழுதியுள்ள படி, மெசியாவைப் பற்றிய, விசுவாச சத்தியங்களை, எத்தியோப்பிய நிதியமைச்சருக்குக் கூறினார்.
 • அவற்றைக் கேட்ட அமைச்சர், பிலிப்புவின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, திருமுழுக்குப் பெற விரும்பினார்.
 • தண்ணீர் நிறைந்திருந்த ஒரு இடத்தைக் கண்டதும், அவர் திருமுழுக்குப் பெற வாஞ்சித்தார்.
 • பிலிப்புவும் அமைச்சரும், தண்ணீருக்குள் இறங்கினர்.
 • அங்கே அமைச்சர், பிலிப்புவின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, திருமுழுக்குப் பெற்றார்.

 • தி.ப 9:18, 22:16 – அனனியா எனும் சீடர்:

  “உடனே, அவருடைய (பவுல்) கண்களிலிருந்து, செதில்கள் போன்றவை விழவே, அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும், அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்” – தி.ப 9:18.

  “இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும். எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு, உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்று, திருமுழுக்குப் பெறும் என்றார்”- தி.ப 22:1 6.

 • அனனியாவை, இயேசு சவுலிடம் அனுப்பினார்.
 • அங்கே, அனனியா சவுலிடம் உரையாடி, அவர் ஆவியால் திருமுழுக்குப் பெற வேண்டும் என்று, சவுலுக்கு அறிவுரை கூறினார்.
 • சவுல் மீண்டும் பார்வை பெற்றார்.
 • அதோடு, சவுல் திருமுழுக்குப் பெற்று, தமஸ்கு “ஆவிக்குரிய சபையோடு” தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டார் - தி.ப 9:19.
 • இந்த திருமுழுக்கால், பவுல் பாவங்களினின்று கழுவப்பெற்றார் என்பதை, மக்கள் கூட்டத்திற்கு சாட்சியாகக் கூறினார்.

 • தி.ப 16:15 – திருத்தூதர் பவுல்:

  “அவரும் அவர் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர். அதன் பின் அவர் எங்களிடம், நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால், என் வீட்டுக்கு வந்து தங்குங்கள் என்று, கெஞ்சி கேட்டு, எங்களை இணங்க வைத்தார்”.

 • பிலிப்பி நகரில், பவுல் நற்செய்தி அறிவித்தார்.
 • அங்கே, தியத்திரா நகரை சார்ந்த, லீதியா என்ற பெண் ஒருவர் இருந்தார்.
 • அவரும், அவருடைய வீட்டாரும், பவுல் கூறிய மீட்பின் வார்த்தைகளைக் கேட்டு விசுவசித்தார்.
 • இவ்வாறு விசுவசித்த, லீதியாவின் வீட்டார் அனைவரும், விசுவாச சத்தியங்களை ஏற்றுக் கொண்டு, திருமுழுக்குப் பெற்று, பிலிப்பி நகர, ஆதி ஆவிக்குரிய சபையோடு, தங்களை இணைத்துக் கொண்டனர்.

 • தி.ப 10:47,48 – திருத்தூதர் பேதுரு:

  “உடனே பேதுரு, “நம்மைப்போல தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட இவர்கள், தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை, யார் தடுக்க முடியும் என்று கூறி, இயேசு கிறிஸ்துவின் பெயரால், அவர்களுக்கு திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார்”.

 • கொர்னேலியுவினுடைய வீட்டில், பேதுருவுடைய பேருரை முடிந்ததும், அவருடைய “மீட்பு பெறுவதற்கான வார்த்தைகளை” (தி.ப 11:14), ஏற்றுக் கொண்டவர்கள் மேல், தூய ஆவி பொழியப்பட்டார்.
 • இந்த பெந்தக்கோஸ்து அனுபவத்தை, பெற்ற விசுவாசிகளை, பேதுரு கவனித்தார்.
 • அருட்பொழிவு பெற்ற அவ்விசுவாசிகளை, ஆவிக்குரிய சபையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று, பேதுரு விருப்பம் கொண்டார்.
 • எனவே, விசுவசிப்பவர்களை, சபையோடு இணைக்கும், தண்ணீர் திருமுழுக்கை, அவர்களுக்கும் கொடுக்கும்படி, பேதுரு பணித்தார்.

 • தி.ப 18:8 – திருத்தூதர் பவுல்:

  “தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர், தம் வீட்டார் அனைவரோடும், ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும், பவுல் கூறியவற்றைக் கேட்டு, நம்பிக்கை கொண்டு, திருமுழுக்குப் பெற்றனர்.

 • பவுல் ஏதேன்சை விட்டு, கொரிந்து நகருக்கு நற்செய்தி அறிவிக்க சென்றார்.
 • அங்கே, ஒவ்வொரு நாளும், பவுல் மக்களோடு பேசி, பலரை விசுவாசம் கொள்ளச் செய்தார் (தி.ப 18:4).
 • கிறிஸ்பு என்னும் ஜெபக்கூடத் தலைவர் ஒருவர், பவுலின் போதனைகளை ஏற்று, விசுவசித்தார்.
 • மேலும், கொரிந்து நகரில், அனேகர் பவுல் கூறிய சத்தியங்களை, மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு, விசுவசித்தனர்.
 • இவ்வாறு விசுவாசம் கொண்டவர்கள், திருமுழுக்குப் பெற்று, கொரிந்து நகர, ஆதி ஆவிக்குரிய சபையோடு தங்களை இணைத்துக் கொண்டனர்.

 • தி.ப 16:29-33 – திருத்தூதர் பவுல்:

  “சிறைக்காவலர், உடனே ஒரு விளக்கை கொண்டு வரச் சொல்லி, விரைந்தோடி வந்து, நடுங்கியவாறே, பவுல் சீலா ஆகியோரின் காலில் விழுந்தார். அவர்களை வெளியே அழைத்து வந்து,

  “பெரியோரே! மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆண்டவராகிய இயேசுவின் மேல் விசுவாசம் கொள்ளும். அப்பொழுது, நீரும் உன் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்றார்கள்.

  பின்பு அவர்கள், ஆண்டவரின் வார்த்தையை, அவருக்கும் அவர் வீட்டில் இருந்த அனைவருக்கும் அறிவித்தார்கள். அவ்விரவு நேரத்திலேயே, அவர் அவர்களை கூட்டிச் சென்று, அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு, அவரும் அவரைச் சேர்ந்தவர்களும், திருமுழுக்குப் பெற்றார்கள்.”

 • சிறையில் இருந்த பவுலும் சீலாவும், ஆவியானவரால் விடுதலை பெற்றனர்.
 • இதைக் கண்ட, சிறைக்கூடத்தலைவன், பவுல் சீலாவின் காலில் விழுந்தான்.

 • பின்பு அவர்கள் இருவரையும், வெளியே அழைத்து வந்து, “மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்.
 • அப்பொழுது பவுல், “மீட்படைவதற்கான அடிப்படை உபதேசம் ஒன்றை, சிறைக்காவலனுக்கு வெளிப்படுத்தினார்.
 • ஆண்டவராகிய இயேசுவின் மேல், விசுவாசம் கொள்வது ஒன்றே, மீட்படைவதற்கான வழி.
 • அவ்வாறு விசுவாசம் கொண்டால், இயேசுவில் விசுவாசம் வைத்தவர் மட்டுமல்ல, அவரும் அவருடைய வீட்டார் அனைவரும் மீட்படைவார்கள்.
 • சிறைக்காவலனும், இயேசுவின் மேல், தான் கொண்ட விசுவாசத்தின் அடையாளமாக, இயேசுவின் ஊழியர்களுடைய காயங்களைக் கட்டி, அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
 • பின்பு அவரும், அவரைச் சார்ந்தவர்களும், தண்ணீரால் திருமுழுக்குப் பெற்று, ஆதி ஆவிக்குரிய சபையோடு, தங்களை இணைத்துக் கொண்டனர்.

 • மனம் மாறுதல் - விசுவாசம் கொள்தல் ஆவியானவரைப் பெற்றுக் கொள்தல்:

 • திருத்தூதர்பணியில், ஒருவர் திருமுழுக்குப் பெற்று, ஆவிக்குரிய சபையோடு இணைத்துக் கொள்ள, மனம் மாற்றம், பாவமன்னிப்பு, விசுவாச அறிக்கை, ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற அனுபவங்கள், பலமுறை முன்குறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.
 • சில இடங்களில், திருமுழுக்கோடு ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதும், (தி.ப 19:5,6.), சபையில் சேருவதற்கான, ஒரு பின்னணியாகக் கூறப்பட்டாலும், அதுவே ஆதி சபையின் தொடர் வழக்கமாக கூறப்படவில்லை.
 • பலமுறை, மனம் திரும்புதல், பாவமன்னிப்பு, அபிஷேகம், இந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்ட பிறகே, சபையில் சேரும் விசுவாச அறிக்கையிட்டு, தண்ணீரில் திருமுழுக்குப் பெற்று, ஆவிக்குரிய சபையோடு இணைந்து கொள்ளும் சடங்கு நடைபெற்றது. (தி.ப 2:41,47, 10:44-48).
 • "கிறிஸ்தவ திருமுழுக்கு"

  பெயர்:

 • கிரேக்கத்தில் “பாப்டிசேயின்” (Baptizein), அதாவது நான் கழுவுகிறேன், என்பது மூல வார்த்தை.
 • “பாப்டிஸ்மா” (Baptisma) என்பது, கழுவுதல் என்பதன் பெயர்ச்சொல்.
 • மேலும், “பாப்டிஸ்மோஸ்” (Baptismos) என்றால், கழுவுதல் சடங்கு என்று பொருள்.

 • மூழ்குதல்:

 • “பாப்டிசேயின்” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து, பாப்டிஸம் என்ற ஆங்கில வார்த்தை வந்தது.
 • இதன் பொருள், உள்ளே செல்வது, உட்புகுவது, அமிழ்வது போன்றவையாகும்.
 • மேலும், “பாப்டிஸ்மோஸ்” என்ற வார்த்தைக்கு, தூய்மைப்படுத்துவதற்காக மூழ்குதல் என்றும், அர்த்தம் உண்டு.
 • டிடக்கேயில் திருமுழுக்கு பற்றிய பாடம்:
 • திருமுழுக்கு அளிக்க வேண்டிய முறையாவது:
 • முதலில் மக்களுக்கு விசுவாச சத்தியங்களை, கற்றுக்கொடுக்க வேண்டும்.
 • அந்த சத்தியங்களை ஏற்றுக்கொண்டவர்களை, திருமுழுக்கு அளித்து, சபையில் சேர்க்க வேண்டும்.
 • திருமுழுக்கு, ஓடும் தண்ணீரில் அளிக்க வேண்டும்.
 • தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் அளிக்க வேண்டும்.
 • ஓடும் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு இல்லையேல், வேறு தண்ணீரிலும் கொடுக்கலாம்.
 • குளிர்ந்த தண்ணீரிலோ, வெந்நீரிலோ கொடுக்கலாம்.
 • தண்ணீரில் முழுமையாக மூழ்கி, திருமுழுக்குப் பெற வேண்டும்.
 • அதற்குரிய வாய்ப்பு இல்லையேல், மூன்று முறை, தண்ணீரை தலையில் ஊற்றி, தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால், திருமுழுக்கு அளிக்கலாம்.
 • திருமுழுக்கு பெறும் நாளில், திருமுழுக்குப் பெறுகிறவரும், திருமுழுக்கு கொடுக்கிறவரும் நோன்பிருக்க வேண்டும்.
 • கூடவே, அத்திருச்சபையிலுள்ள, ஆவிக்குரிய விசுவாசிகளும், நோன்பிருப்பது நலம்.
 • மேலும், திருமுழுக்குப் பெறுபவர், ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்தே, நோன்பிருக்க ஆரம்பிக்கலாம்.
 • தண்ணீரில் மூன்று முறை, மூழ்கி எழும் திருமுழுக்குச் சடங்கானது, ஒருவரை தாம் கேட்டறிந்த, விசுவாச சத்தியங்களுக்கு, கட்டுப்படுத்துவதாக அமைய வேண்டும்.

 • ஆதி ஆவிக்குரிய சபையில் திருமுழுக்கு:

  டிடக்கே (Didache) – அப்போஸ்தலர்களின் படிப்பினை (கி.பி 45-60):
 • ஆதி ஆவிக்குரிய சபையில், அப்போஸ்தலர்கள் எங்கும் நற்செய்தி அறிவித்த வண்ணமாக இருந்தார்கள்.
 • வேதகலாபனையின் போது, மக்கள் சிதறுண்டு, உலகின் பல்வேறு பாகங்களிலும், மக்களுக்கு விசுவாசத்தை ஊட்டினார்கள்.
 • இவ்வாறு, ஆதி ஆவிக்குரிய சபை உலகெங்கும் பரவியது.
 • பெரும்பாலும், ஆவிக்குரிய விசுவாசிகளே, நற்செய்தியை பறைசாற்றினார்கள்.
 • அந்த நாட்களில், நற்செய்தி எழுத்து வடிவில், இன்னும் வரவில்லை.
 • நற்செய்தி, போதனை வடிவில் மட்டுமே இருந்தது.
 • எனவே, மக்கள் விசுவசித்து ஏற்றுக்கொண்டு வாழ வேண்டிய சத்தியங்களை, சுருக்கமாக உருவாக்கி, முதலில் அதை விசுவசித்த ஆவிக்குரிய மக்களிடம், பிரகடனப்படுத்தினர்.
 • இவ்வாறு வெளியான முதல் நூல், “டிடக்கே” என்ற அப்போஸ்தலர்களின் படிப்பினை அடங்கிய ஒரு நூல்.
 • இந்நூல், பல முக்கியமான தலைப்புகளை விளக்குகிறது.
 • இந்நூலில் பதினாறு அதிகாரங்கள் உள்ளன.
 • இந்நூலில் வரும் ஒரு பாடம் திருமுழுக்கைப் பற்றியது.
 • திருமுழுக்கைப் பற்றி, எழுத்து வடிவில் வந்த, முதல் பாடமும் இதுவே.

 • ஆதி ஆவிக்குரிய சபைகளில் திருமுழுக்குகள்:
 • ஆதி ஆவிக்குரிய சபைகள், வேத கலாபனையின் பின்னணியில், பிறப்பெடுத்து வளர்ந்தன.
 • உலகின் பல்வேறு பாகங்களிலும், மறைவாக குகைகளிலும், காட்டுப்பகுதிகளிலும், ஆதி ஆவிக்குரிய சபை, சிதறுண்டு வளர்ந்ததால், சபைகளில் திருமுழுக்கு பற்றிய வழிகாட்டுதல், டிடக்கேயின் அடிப்படையிலேயே அமைந்தன.

 • மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்திய கத்தோலிக்க ஸ்தாபன சபைகளில் திருமுழுக்கு:
 • கி.பி. 315 – க்குப் பின், ஆதி ஆவிக்குரிய திருச்சபையை கொடுமைப்படுத்திய உரோமை மன்னன் கான்ஸ்டன்டைன், திருச்சபையின் நண்பனாகி, கிறிஸ்தவராக மாறினான் .
 • தன்னுடைய ஆணைக்குட்பட்ட, அனைத்து மக்களையும், கிறிஸ்தவராகும் படி வற்புறுத்தினான்.
 • ஆதி ஆவிக்குரிய சபையில், மனம் மாறி, பாவமன்னிப்படைந்து, அருட்பொழிவு பெற்றவர்கள், விசுவாச சத்தியங்களுக்கு கட்டுப்பட்டு, திருமுழுக்கால், ஆவிக்குரிய சபையில் உறுப்பினராயினர்.
 • ஆனால், உரோமை திருச்சபையின் ஆரம்ப காலத்திலும், இந்த வழிமுறையில், மக்களை, திருச்சபையில் சேர்ப்பது, சற்று சிரமமாக இருப்பினும், இந்த முறையே, அங்கும் பயன்படுத்தப்பட்டது.
 • ஆதி உரோமை திருச்சபையின் பாதுகாப்பிலும், பராமரிப்பிலும், ஆதி ஆவிக்குரிய சபை இருந்ததால், ஆதி ஆவிக்குரிய சபையின், பல வழிகாட்டு முறைகளை, ஆதி உரோமை திருச்சபையும் அப்படியே பின்பற்றியது.
 • திருமுழுக்குத் தொட்டிகள்:
  I

  காலம் : மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
  இடம் : அல்ஜீரியாவில் உள்ள, திம்காட் (Timgad) எனும் இடம்.

  விபரம்:

  மூன்றாம் நூற்றாண்டில், உரோமை மன்னன், டிராஜனின் காலத்தில், வட ஆப்பிரிக்காவிலுள்ள, திம்காட் என்னும் இடத்தில், உரோமை நகரம் ஒன்று உருவாக்கப்பட்டது. அங்கே, கிறிஸ்தவம் தழைத்து வளர்ந்தது.

  உரோமை கத்தோலிக்க சபை தோன்றிய பின், இந்தப் பகுதிகளில், கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டப்பட்டன. இந்த ஆலயங்களின் அருகாமையில், திருமுழுக்குத் தொட்டிகளும் கட்டப்பட்டன. மேலே கண்ட தொட்டி, அதே காலத்தில், திம்காட் என்னும் இடத்தில் கட்டப்பட்டிருந்ததை, 1881 – ம் ஆண்டு, அகழ்வாராய்ச்சியின் போது கண்டு பிடித்தார்கள்.

  இன்றும் இந்த தொட்டியை நாம் பார்க்கலாம். வட்ட வடிவமான இந்தத் திருமுழுக்குத் தொட்டி, மூன்று அடுக்குப் படிக்கட்டுகளைக் கொண்டது. திருமுழுக்குப் பெறுபவர், படி வழியாக, தண்ணீருக்குள் இறங்கி, “முழுமையாக மூழ்கி” திருமுழுக்கு எடுப்பார்.

  மேலே காணும் திருமுழுக்குத் தொட்டி, “திருமுழுக்குக் கூட”த்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் நாம் காணும் தூண்கள், திருமுழுக்குக் கூட கூரைக்காக போடப்பட்டவை.

  II

  காலம் : நான்காம் நூற்றாண்டின் முற்பகுதி.
  இடம் : அல்ஜீரியாவில் உள்ள, திம்காட் (Timgad) எனும் இடம்.

  விபரம் :

  இந்த திருமுழுக்குத் தொட்டியும், திருமுழுக்குக் கூடத்திற்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொட்டி, எண்கோண வடிவத்தில் உள்ளது. மேலும், கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

  கற்களில் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையும், நாம் காணலாம். திருமுழுக்குத் தொட்டிக்கு தரப்பட்ட முக்கியத்துவம், திருமுழுக்குக்கு தரப்பட்டதாகவே நாம் காண முடிகிறது. இங்கும், முழுமையாக மூழ்கி திருமுழுக்கு எடுத்ததாகவே நாம் பார்க்கிறோம்.

  III

  காலம் : ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி.
  இடம் : குறோயேசியாவிலுள்ள, சலோனா எனும் இடம்.

  விபரம்:

  இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து, இந்த இடம், மிகுந்த கிறிஸ்தவ பற்றுள்ள நகரமாக இருந்தது. புனித பவுலின் சீடரான தீத்து என்பவர், இந்த நகரில், நற்செய்தி அறிவித்திருந்தார்.

  சலோனா ஒரு கிரேக்க, உரோமை காலணியாகவும் இருந்தது. இங்கே தான், இரத்தசாட்சிகள் உருவானார்கள். “இரத்த சாட்சிகளின் இரத்தக்களம்” என்று இந்த நகரம் அழைக்கப்பட்டது.

  இயேசுவின் பாடுகளில் இந்த ஆவிக்குரிய சபை, எவ்வளவு ஈடுபாடோடு பங்கு பெற்றதென்றால், தாங்கள் திருமுழுக்குப் பெற்ற தொட்டியையும், சிலுவை வடிவில் அமைத்தது. இந்த நகரில், அனேக திருமுழுக்குத் தொட்டிகள் இருந்தன. அவை எல்லாமே, சிலுவை வடிவில் தான் இருந்தன.

  வேதகலாபனைக்குப் பிறகு, அமைக்கப்பட்ட திருமுழுக்குத் தொட்டிகளெல்லாம், சித்திர வேலைப்பாடுகள் அமைந்ததாகவே காணப்படுகின்றன. மேலே காணும் திருமுழுக்குத் தொடடி, திறந்த வெளிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

  இங்கும் படிக்கட்டுகளில் இறங்கிப்போய், தண்ணீரில் மூழ்கி, திருமுழுக்கு எடுக்கும் விதத்தில், திருமுழுக்குத் தொட்டிகள் அமைந்திருந்ததாகத் தெரிகிறது.

  IV

  காலம் : ஐந்தாம் நூற்றாண்டு.
  இடம் : அலஹான், இசவுரியா, இன்றைய துருக்கியில்.

  விபரம்:

  இந்த பிரதேசம், ஒரு காலத்தில் ஆவிக்குரிய மடாலயங்கள் அமைந்திருந்த இடம். மலைப்பிரதேசமான இங்கே, அனேக குகைகள் இருந்தன. வேதகலாபனையின் போது, விசுவாசிகள் மறைந்திருந்த இடங்கள் இவை.

  இங்கே அமைந்திருக்கும் திருமுழுக்குத் தொட்டி, சிலுவை வடிவத்தில் அமைந்திருந்தது. படிக்கட்டுகளில் மக்கள் இறங்கிப் போய், மூழ்கி, திருமுழுக்குப் பெற்றார்கள். சமீப காலத்தில், நடந்த அகழ்வாராய்ச்சியின் போது, இந்த இடம் கண்டு பிடிக்கப்பட்டது.

  உரோமைத் திருச்சபை ஆரம்பித்த பின்பும், இந்த பகுதியில், வாழ்ந்து வந்த, ஆவிக்குரிய திருச்சபை, தங்கள் நகரங்களுக்கும் வீடுகளுக்கும் திரும்பிச் செல்லவில்லை. இங்கிருந்த மடாலயங்கள் இதற்கு இன்றும் சான்று பகர்கின்றன. ஆதி ஆவிக்குரிய சபையில், திருமுழுக்கு மூழ்கியே எடுக்கப்பட்டது என்றும், திருமுழுக்கு மிகுந்த தயாரிப்போடு நடைபெற்றது என்றும், இந்த திருவிடங்கள் நமக்குக் காட்டுகின்றன.

  V

  காலம் : ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
  இடம் : புல்லா ரேஜியா, இன்றைய துனேசியா.

  விபரம்:

  இந்த திருமுழுக்குத் தொட்டி, ஒரு “திருமுழுக்குக் கூடத்தில்” அமைந்திருந்ததாக தெரிகிறது. இதன் பக்கவாட்டில் காண்கின்ற, தூண்கள், கூரை அமைப்பைக் காட்டுகின்றன. இடிபாடுகளுக்கிடையே இன்று நாம் காணும் இந்த இடம், திருமுழுக்கு அளிப்பதற்காக, ஆதி கத்தோலிக்க சபையில், பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

  இங்கே ஒரு பைசன்டைன் கோயில் இருந்ததாக தெரிகிறது. அந்த கோயிலின் அருகில் அமைந்திருந்த, திருமுழுக்குக் கூடத்தில் தான், இப்படி ஒரு திருமுழுக்குத் தொட்டி கட்டப் பட்டிருந்தது. இன்றைய வட ஆப்பிரிக்காவில், இந்த இடம் அமைந்துள்ளது. சிலுவை வடிவத்திலுள்ள இந்த திருமுழுக்குத் தொட்டியும், அதன் கட்டிடங்களும், ஆலயமும், துருக்கியர் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டிருக்கலாம்.

  VI

  காலம் : ஆறாம் நூற்றாண்டு.
  இடம் : எலவுசா செபாஸ்தே.

  விபரம்:

  ஏறக்குறைய கி.மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே இந்த இடம், கிரேக்க நாகரீகத்தில் வளர்ச்சியடைந்திருந்தது.

  கிறிஸ்தவம் பரவிய காலத்தில், இந்த நகரிலும், ஆதிக் கிறிஸ்தவர்கள் உருவானார்கள். உரோமை ஆதிக்கத்துக்குப் பின், இங்கே, கிறிஸ்தவ ஆலயங்கள் தோன்ற ஆரம்பித்தன.

  மேலே நாம் காண்பது, இந்த நகரில் ஆலயத்துக்கு அருகே அமைந்துள்ள, ஒரு திருமுழுக்குத் தொட்டி. இந்த தொட்டி, சிலுவை வடிவில், அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொட்டி, பெரும்பாலும், ஒரு “திருமுழுக்குக் கூடத்தினுள்” அமைந்திருக்க வேண்டும்.

  திருமுழுக்குக் கூடம்:
  I

  காலம் : ஐந்தாம் நூற்றாண்டு.
  இடம் : றாவெண்ணா, இத்தாலி.

  விபரம்:

  இந்த இடம், இத்தாலி நாட்டின், கிழக்கு கடற்கரையை ஒட்டியதாக உள்ளது. மேற்கு உரோமை அரசின், தலைநகராகவும், இந்த நகர் செயல்பட்டது.

  மிகவும் தொன்மை வாய்ந்த இந்த நகரில், மிக உயர்ந்த, பழமையான கட்டிடங்கள் உள்ளன. இந்நகரில் ஆயரான, ஊர்சூஸ் என்பவரால், கட்டப்பட்ட பல திருமுழுக்குக் கூடங்களில், ஆர்தடாக்ஸ் திருமுழுக்குக் கூடமும் ஒன்று.

  இதில், எண்கோண வடிவில் கட்டப்பட்ட, திருமுழுக்குத் தொட்டி ஒன்று உள்ளது. ஐந்தாம் நூற்றாண்டுக்கு பிற்பகுதியில், ஆயர் நெயோண் என்பவரால், இந்த திருமுழுக்குக்கூடம், பளிங்கு கற்களால் அழகுப்படுத்தப்பட்டது.

  இங்கே காணும், திருமுழுக்குத் தொட்டியின் எண்கோண வடிவம், வாரத்தின் ஏழு நாட்களையும், உயிர்ப்பின் எட்டாம் நாளையும் குறிப்பதாகக் கூறுவர். திருமுழுக்குக் கூடம், பல சித்திர வேலைப்பாடுகளோடு, மிக அழகுற வடிவமைக்கப்பட்டிருந்தது.

  அந்நாட்களில், திருமுழுக்கு எவ்வளவு முக்கியமாக கருதப்பட்டது என்பதை, இந்த திருமுழுக்குக் கூடங்கள் இன்றும் பறைசாற்றுகின்றன.

  II

  காலம் : ஐந்தாம் நூற்றாண்டு.
  இடம் : லேட்டரண், தென் இத்தாலி.

  விபரம்:

  இயற்கை நீரூற்று நிறைந்த ஓர் இடம் இது. இங்கே, தொடக்கத்தில், ஆதிக்கிறிஸ்தவர்களுக்கு திருமுழுக்கு அளிப்பது, வழக்கமாக இருந்தது. உரோமைத் திருச்சபையின் தோற்றத்துக்கு பின், இதே இடத்தில், மிகப்பிரமாண்டமான “திருமுழுக்குக்கூடம்” ஒன்றை அமைத்தார்கள்.

  அதன் வெளித்தோற்றத்தை இங்கே காண்கிறோம். அந்த நாட்களில், ஆண்டுக்கு மூன்று முறைதான், திருமுழுக்கு வழங்கப்பட்டது. ஆயத்த நிலையினரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், திருமுழுக்குக் கூடங்களும் பெரியதாகவே அமைந்தன.

  உள்ளே, திருமுழுக்கு அளிப்பவர்களுக்கான இருப்பிடங்களும், பெறுபவர்களுக்கான இருப்பிடங்களும், தனித்தனியே அமைந்தன. ஆண், பெண் இருபாலருக்கும், தனித்தனியே இருப்பிட வசதிகள், ஆடை மாற்று வசதிகள், போன்றவை செய்யப்பட்டிருந்தன.

  குளிர் காலங்களில், திருமுழுக்கு எடுத்தவர்கள், தங்களை சூடுபடுத்தி, உலர்த்திக்கொள்ளும் வகையில், நெருப்பால், தீமூட்டி, உஷ்ணமுண்டாக்கும் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

  திருமுழுக்கு நடத்துபவர்கள், ஆயர்களாக இருந்தாலும், பெண்களுக்கான திருமுழுக்கில், முதிர்ச்சிபெற்ற, பரிசுத்த வதிகளான, பெண்துறவிகள் பயன்படுத்தப்பட்டனர்.

  III

  காலம் : நான்காம் நூற்றாண்டு.
  இடம் : பிளாரன்ஸ், இத்தாலி.

  விபரம்:

  இந்த திருமுழுக்குக் கூடம் தான், இன்று வரை பராமரிக்கப்படுகின்ற, மிகத் தொன்மையான திருமுழுக்குக் கூடம். இந்த திருமுழுக்குக் கூடத்தை, கான்ஸ்டன்டைன் மன்னனே முன்நின்று கட்டியதாக கூறுவர். மிகவும் அழகு வேலைப்பாடுகளோடு இந்த திருமுழுக்குக்கூடம் கட்டப்பட்டுள்ளது.

  அனைத்தும், மார்பிள் கற்களால் கட்டப்பட்ட கூடம் இது. உள்ளே இருக்கும் திருமுழுக்குத் தொட்டியைப் போலவே, இந்தர திருமுழுக்குக் கூடமும், எண்கோண வடிவம் கொண்டது. வாரத்தின் ஏழு நாட்களையும், இயேசுவின் உயிர்ப்பு நாளையும் சேர்த்து, எட்டு நாட்களை கருத்தில் கொண்டு, இந்த திருமுழுக்குக் கூடம் வடிவமைக்கப்பட்டதாகக் கூறுவர்.

  “பழைய ஏற்பாட்டின் முக்கியமான வேத நிகழ்வுகளையும், புதிய ஏற்பாட்டின் முக்கிய வேத நிகழ்வுகளையும், இந்த கூடத்தின் சுவர்களில், சித்தரித்து வைத்துள்ளார்கள். மோசே திருச்சட்டம் பெற்றுக்கொள்ளுதல், பேதுரு விண்ணகத் திறவுகோல் பெற்றுக்கொள்ளுதல், இயேசுவின் திருமுழுக்கு போன்ற சித்திரங்கள் இவற்றில் அடங்கும்.

  ஆதி கத்தோலிக்க சபை, ஆதி ஆவிக்குரிய சபையையே பிரதிபலித்தது. அதற்கு ஒரு அடையாளமே திருமுழுக்குக் கூடம். ஆதி ஆவிக்குரிய திருச்சபையில், திருமுழுக்குக்கு மிகுந்த தயாரிப்பு இருந்தது. ஒருவர் மீட்படைந்து, திருச்சபையில் உறுப்பாக மாற, பல கட்டங்களாக தயாரிக்கப்பட்டார்கள். இறுதியில் திருமுழுக்கு எனும் உடன்படிக்கைச் சடங்கு, மிகவும் அனுபவமாகவும், ஆடம்பரத்தோடும் நடைபெற்றது.

  இந்த திருச்சடங்கிற்கு, ஆதி ஆவிக்குரிய சபையும்,ஆதி கத்தோலிக்க சபையும், எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததென்றால், உரோமைத் திருச்சபையை ஸ்தாபித்த கான்ஸ்டன்டைன் மன்னன், இந்த திருமுழுக்கு எடுக்க அச்சமுற்று, காலம் தாழ்த்தினான் என்று அறிகிறோம்.

  அவ்வண்ணமே, பிரமாண்டமான ஆலயங்கள், கிறிஸ்தவர்களுக்கு உரோமை அரசால் கட்டித் தரப்பட்ட போது, அதே முக்கியத்துவத்தோடு ஆலயங்களுக்கு அருகாமையில், திருமுழுக்குக் கூடங்களும், கட்டித்தரப்பட்டன.

  கான்ஸ்டன்டைன் மன்னன், திருமுழுக்குக் கூடத்தை எவ்வளவு புனிதமான இடமாக கருதினார் என்றால், தன்னுடைய மகள் இறந்தபோது, அவளை ஒரு திருமுழுக்குக் கூடத்தில் அடக்கம் செய்ய கட்டளையிட்டார்.

  ஆலயம், திருச்சபை வாழும் இடம் என்றால், திருமுழுக்குக் கூடம், திருச்சபை பிறக்கும் இடம். இந்த கருத்து, ஆதி ஆவிக்குரிய சபையிலும், ஆதி கத்தோலிக்க சபையிலும், ஆழமாக பதிந்திருந்தது.

  IV

  காலம் : 13 – ம் நூற்றாண்டு.
  இடம் : பிஸ்தோயியா, இத்தாலி.

  விபரம்:

  பிஸ்தோயியா என்னும் இடம், பிளாரன்சிலிருந்து வடமேற்காக, இருபத்து ஐந்து கிலோமீட்டார் தொலைவில் இருக்கிறது.

  பிஸ்தோயியா திருமுழுக்குக்கூடம், 1337 - 1359 – ல், செல்லினோ தி நேசி என்பவரால் கட்டப்பட்டது. அந்தரேயா பிசானோ என்பவரால், வடிவமைக்கப்பட்டது.

  கரும் பச்சை நிறமும், வெள்ளை நிறமுமான பளிங்கு கற்களால், இந்த திருமுழுக்குக் கூடம் கட்டப்பட்டது.

  மக்களின் நாகரீகமும், அறிவுக்கூர்மையும் வளர, வளர, அவர்கள் கட்டிட அமைப்புகளும் வளர்ந்தன. அவ்வண்ணமே, திருமுழுக்குக் கூடங்களின், அமைப்பு முறைகளும் மாற்றமடைந்தன.

  பேராலயங்களுக்கு அருகாமையில், திருமுழுக்குக் கூடங்கள் அமைவது, மிக முக்கியமானதொன்றாக, உலகமெங்கும் கருதப்பட்டது.

  V

  காலம் : 2005, நவம்பர் 4.
  இடம் : அட்லாண்டா, ஜியார்ஜியா.

  விபரம்:

  விண்ணேற்பு அன்னை மரியாளின் பேராலயத்துக்குரிய திருமுழுக்குக் கூடம் இது. இந்த திருமுழுக்குக் கூடம், பழங்காலத்து முறையிலேயே தயாரிக்கப்பட்டுளளது.

  அதாவது, எண்கோண வடிவத்தில், இந்த கூடம் அமைந்துள்ளது. இதில் எட்டாம் நாள், உயிர்த்த இயேசுவைக் குறிக்கின்றது. இந்த திருமுழுக்குக் கூடத்தில் நுழைபவர்கள், உயிர்த்த மக்களாக வெளியே வருகின்றார்கள் என்பதே இதன் பொருள்.

  அவ்வண்ணமே, திருமுழுக்குத் தொட்டி, சிலுவை வடிவத்தில் அமைந்துள்ளது. இந்த திருமுழுக்குத் தொட்டியின் பொருள், திருமுழுக்கு திருச்சடங்கால், ஒருவர், தன் ஊனியல்புகனை சிலுவையில் அறைந்து, ஆவியின் இயல்போடு வெளியே வருகின்றார் என்பதாகும்.

  VI

  காலம் : 2007.
  இடம் : அலிஸ்டோண், ஜார்ஜியா.

  விபரம்:

  புனித பிலிப்பு பேராலயத்தை ஒட்டி, இந்த திருமுழுக்குக் கூடம் அமைந்துள்ளது.

  இங்கே இரண்டு படங்கள் தரப்பட்டுள்ளன. ஒரு சிற்றாலயமாகவே, இந்த திருமுழுக்குக் கூடம் அமைந்துள்ளது. விசுவாசிகளும், திருமுழுக்குப் பெறுபவர்களும் இணைந்தே, திருமுழுக்கு தயாரிப்பு ஆராதனையில் பங்கேற்கிறார்கள். திருமுழுக்கு எடுப்பது, விசுவாசிகளின் கூட்டத்தோடு நடைபெறுகிறது.

  எனவே, இங்கு எல்லாமே, இன்றைய தொழில் நுட்ப அடிப்படையில், இன்றைய மக்களின் வசதிக்கு ஏற்றவாறு, திருமுழுக்குக் கூடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  மொத்தத்தில், திருமுழுக்குக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை, இன்றைய இளைய தலைமுறை உணருமாறு, இந்த திருமுழுக்குக் கூடங்கள் இன்றும் அமைந்துள்ளன.

  Go to Top