"உயிர்ப்பின் விடுதலை"

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !

படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களிலும் செயல்களிலும் உயிர்ப்பு நிகழ்வது உண்டு. உயிர்ப்பு என்பது ஒரு உயர்நிலையை அடைகின்ற அனுபவம். ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு கடந்துசெல்வதை உயிர்ப்பு என்கிறோம். ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலையை அடையும்போது விடுதலை கிடைக்கின்றது. விடுதலையின் வளர்ச்சிக்கான மாற்றம் ஏற்படுகின்றது.

இயற்கையில் கோடை காலத்திலிருந்து மழைக்காலம் உருவாகும்போது, உயிர்ப்பின் விடுதலையை காண்கிறோம். துன்பங்கள், நெருக்கடிகள், கஷ்டங்களிலிருந்து நமக்கு விடுதலை கிடைப்பதால் உயிர்ப்பை பெறுகிறோம். குளிரின் உயிர்ப்பு வெப்பம் ஏற்படும்போது நடைபெறுகின்றது. நோயின் உயிர்ப்பு, நலனில் கிடைக்கிறது. களைப்பின் உயிர்ப்பு, தூக்கத்தில் நடைபெறுகின்றது. பாவத்திலிருந்து விடுதலை பெற்று பரிசுத்தம் அடைவதால், உயிர்ப்பு கிடைக்கின்றது.

முட்டையின் உயிர்ப்பு கோழி குஞ்சாக மாறும்போது நடைபெறுகின்றது. உழைக்கும் போது கிடைக்கும் பலனால், உயிர்ப்பை பெறுகிறோம். நாம் அடிமைப்படுத்தப்பட்டு துன்புற்றால் அதிலிருந்து விடுதலை கிடைப்பதை உயிர்ப்பு என்கிறோம். கவலையிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைவதால் உயிர்ப்பை பெறுகிறோம். பயம் போக்கப்பட்டு திடமனம் பெறுவதால், உயிர்ப்பை அடைகிறோம். இவ்வாறு உயிர்ப்பு மீட்போடு பொருத்தி காட்டப்பட்டுள்ளது.

இயேசுவின் உயிர்ப்பு நமக்கு நம்பிக்கையையும், விடுதலையையும், தருகின்றது. துன்பங்களில் பெரிய துன்பமாகிய மரணம் ஏற்பட்ட போதும், இயேசுவை ஜெயம் கொள்ள முடியவில்லை. மூன்றாம் நாளுக்குள் உயிர்த்தெழுவார் என்னும் மறைநூல் வாக்கு நிறைவேறியது - யோவ 20:9. “விடுதலை அளிப்பவர் ஆண்டவர்” - தி.பா 3:8. நம்முடைய போராட்டங்களில், பிரச்சனைகளில், நெருக்கடிகளில் விடுதலை தருவார். “இறந்தேன்! ஆயினும் என்றென்றும் வாழ்கிறேன்” - தி.வெ 1:18 என்றுரைத்த தேவன் உயிர்த்த இயேசுவாக நம்மை ஆசீர்வதிக்க நம்மோடிருக்கிறார்.

பயத்திலிருந்து உயிர்ப்பின் விடுதலை

சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சி அச்சத்தோடும், கலக்கத்தோடும் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். “உயிர்த்த இயேசு” அங்கு வந்து, அவர்கள் நடுவில் நின்று “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று வாழ்த்தினார் - யோவா 20:21.

உயிர்த்த இயேசு சீடர்களை வாழ்த்திய போது சமாதானமும். சந்தோஷமும், மனஉறுதியும் பெற்று கொண்டார்கள். வேதம் கூறுகிறது “நான் ஆண்டவரை தேடினேன். அவர் என் மன்றாட்டை கேட்டருளினார். எல்லாவித அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்” - தி.பா 34:4. சீடர்கள் கடவுளை தேடியபோது பயம் போக்கப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

நோயிலிருந்து உயிர்ப்பின் விடுதலை

எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் குளம் ஒன்று இருந்தது. இதற்கு “பெத்சதா” என்பது பெயர். இம்மண்டபத்தில் பலவிதமான நோய்களினால் துன்புற்றவர்கள் படுத்திருந்தார்கள் - யோவா 5:3. ஏனெனில், ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கி தண்ணீரை கலக்குவார்கள். தண்ணீர் கலங்கிய பின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்.

முப்பத்தெட்டு ஆண்டுகளாக பிணியுற்றிருந்த ஒருவர் அந்த மண்டபத்தில் படுத்திருந்தார். வேதனையோடும், மனபாரத்தோடும், கண்ணீரோடும் வாழ்ந்த நோயாளியை குணப்படுத்த இயேசு தேடி வந்தார். “மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” - 1சாமு 16:7. பல ஆண்டுகளாக துன்பற்ற அந்த மகளின் வேதனையை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று கேட்டார் - யோவா 5:6.

அவர் இயேசுவிடம், தண்ணீர் கலங்கும் போது என்னை குளத்தில் இறக்கிவிட ஆளில்லை. நான் போவதற்கு முன் வேறொருவர் இறங்கி விடுவார். எனக்கு உதவி செய்ய ஆளில்லை. என தன் மனவேதனையை எடுத்துரைத்தார். இயேசு அவர் மீது அக்கறைகொண்டு, “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்றார் - யோவா 5:8. உடனே நோயுற்றவர் நலமடைந்து படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார் யோவா 5:9.

இயேசு நலமடைந்தவரை கோவிலில் கண்டு “இதிலும் கேடானது நேராதபடி இனிமேல் பாவம் செய்யாதீர்” என்றார் - யோவா 5:14. “அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கிறார். உன் நோய்களை எல்லாம் குணமாக்குகிறார்” - தி.பா 103:3. இயேசு நோயுற்றவரின் பாவங்களிலிருந்தும் பாவத்தின் விளைவான துன்பங்களிலிருந்தும் விடுதலை கொடுத்தார்.

பாவத்திலிருந்து உயிர்ப்பின் விடுதலை

1. சவுல்

சவுல் என்பவர் இயேசுவின் பெயரை அறிக்கையிட்டு, வழிபட்டு வந்த எல்லோரையும் கைது செய்து, எருசலேமுக்கு கொண்டுவர தமஸ்குநகரிலுள்ள தொழுகை கூடங்களிலிருந்து கடிதங்களை கேட்டு வாங்கினார். சவுல் தமஸ்கு நகருக்கு மக்களை துன்புறுத்துவதற்காக சென்று கொண்டிருந்த வேளையில், உயிர்த்த இயேசு அவருக்குத் தோன்றி, “சவுலே! சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே! நீ யார்?” எனக் கேட்டார். ஆண்டவர், “நீ துன்புறுத்தும் இயேசு நானே, நீ எழுந்து நகருக்குள் செல், நீ என்ன செய்ய வேண்டும் என்பது அங்கே உனக்கு சொல்லப்படும்” என்றார் - தி.தூ 9:4,5.

இயேசுவின் பெயரை அறிக்கையிட்டு, வழிபட்டுவந்த மக்களை துன்புறுத்துவது இயேசுவையே துன்புறுத்துவது என கடவுள் சவுலுக்கு வெளிப்படுத்தினார். சவுல் மூன்று நாட்கள் பார்வையற்றிருந்தார். உயிர்த்த இயேசு அனனியா என்ற சீடருக்கு தோன்றி, “நீ எழுந்து நேர்த்தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தொடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார். அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்” என்று கூறினார் - தி.தூ 9:11,12.

சவுல் “இறைமக்கள் அனைவரும் உயிருள்ள தேவனை ஏற்று வழிபடுவதை அறியாமல் துன்புறுத்த சென்றேன்” என, தன் குற்றங்களை ஏற்றுக் கொண்டு மனம் வருந்தினார். “உயர்ந்த தூயஇடத்தில் நான் உறைகின்றேன், நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன், நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும், நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன்” - ஏசா 57:15 என்றுரைத்த தேவன், அனனியா என்ற இறைவாக்கினர் வழியாக சவுல் கண்பார்வையடைய உதவி செய்தார். சவுல் தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி அழுது ஜெபித்தார். பரிசுத்த ஆவியையும், வல்லமையையும் உயிர்த்த இயேசு சவுலுக்கு அருளினார் - தி.தூ 9:17.

தூயஆவி உங்களிடம் வரும் போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும், யூதேயா, சமாரியா முழுவதிலும், உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் - தி.தூ 1:8 என்ற வசனத்தின்படி தூய ஆவியை பெற்றுக்கொண்ட சவுல் ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்து அனேகரை மீட்பின் பாதையில் வழிநடத்தி வந்தார்.


2. தாவீது

ஆண்டவர் நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் தாவீதிடம், “ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீயது செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இரையாக்கி, அவன் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்” - 2சாமு 12:9,10 என்று கேட்டார். உடனே தாவீது, கடவுளுக்கு விரோதமாக செய்த எல்லா பாவங்களுக்காகவும் மனம் வருந்தினார். “என்குற்றங்களை நான் உணர்கின்றேன், என் பாவம் எப்போதும் என்மனக்கண் முன் நிற்கின்றது. உமக்கெதிராக நான் பாவம் செய்தேன், என்னை மன்னித்து எற்றுக்கொள்ளும்” என வேண்டினார். - தி.பா 51:3,4.

மேலும், “தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே உருவாக்கியருளும்” என்றும் ஜெபித்தார் - தி.பா 51:10. ஆண்டவருக்கு முன்பாக தன்னை தாழ்த்தி பாவங்களை அறிக்கையிட்டு, பரிசுத்த ஆவிக்காக வேண்டியபோது, உயிர்ப்பின் விடுதலையை இறைவன் அவருக்கு அருளினார். “ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது. ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார், ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையை பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விழாவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்” - எசா 61:1 என்ற வசனத்தின்படி நாத்தான் இறைவாக்கினர் வழியாக தாவீதை பாவகட்டுகளிலிருந்து கடவுள் விடுவித்தார். மேலும் தாவீது, தன் சங்கீத வரிகளில், உயிர்ப்பின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார் - தி.பா 119:92.

தாவீதின் உயிர்ப்பின் விடுதலை

தாவீது ராஜா கூறுவார், “என் இதயத்தில் கவலைகள் பெருகும்போது, உமது ஆறுதல் என் உள்ளத்தை மகிழ்விக்கின்றது” - தி.பா 94:29. தன்னுடைய நெருக்கடி, கஷ்டங்களில் விடுதலைக்காக கடவுளை நோக்கி பார்த்தார். தேவன் மகிழ்ச்சியினால் நிரப்பினார். நெருக்கடியும், துன்பமும் என்னை சூழ்ந்து கொண்டன. உம் கற்பனைகள் என் இன்பமாய் உள்ளன - தி.பா. 119:143. என்று தாவீது கூறினார். நெருக்கடிகள், கஷ்டங்களில் இறைவனின் வாக்குத்தத்தங்கள், வார்த்தைகள் தாவீதுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. நான் இடைவிடாமல் இறை வார்த்தைகளை தியானித்த போது, நெருக்கடிகளிலிருந்து விடுதலை பெற்று கொண்டேன் என்றார்.


உழைப்பில் உயிர்ப்பு

இயேசுவின் சீடர்கள் இயேசு இறந்த பின்பு, ஊழியத்தை விட்டுவிட்டு, மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றார்கள். அவர்கள் இராமுழுவதும், உழைத்து கஷ்டப்பட்டபோதும் மீன் ஒன்றும் கிடைக்காமல், மனவேதனையோடு இருந்தார்கள். “உயிர்த்த இயேசு” அவர்களுக்குத் தோன்றி, “மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார் - யோவா 21:5. சீடர்கள் கிடைக்கவில்லை என்று மறுமொழி கூறினார்கள்.

அதற்குஇயேசு, “வலப்பக்கத்தில் வலைகளை வீசுங்கள்” - யோவா 21:6. சீடர்கள் இயேசுவின் வார்த்தையை நம்பி வலைகளை வீசிய போது, வலைகளை இழுக்க முடியாத அளவுக்கு மீன்கள் அகப்பட்டன - யோவா 21:6. உழைப்பின் உயிர்ப்பை பலனில் கண்டு கொண்டனர். எளியவரையும், உள்ளம் வருந்துபவரையும் நான் கண்ணோக்குவேன் - எசா 66:2 என்றுரைத்த தேவன் சீடர்களை ஆசீர்வதித்தார்.


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !

பலவிதமான நோய்களினால், நெருக்கடிகளினால், கண்ணீரோடும், வேதனையோடும், மனபாரத்தோடும் துன்புற்று கொண்டிருக்கும் நமக்கும் “உயிர்த்த இயேசு” விடுதலை தருவார். “இதோ! உலகம் முடிவு வரை எந்நாளும் நான் உங்களோடிருக்கிறேன்” - மத் 28:20 என்றுரைத்த தேவன் சீடர்களுடன் கூடவே இருந்து அச்சத்தை நீக்கி, மகிழ்ச்சியினால் நிரப்பினார். சீடர்களின் தேவைகளை அறிந்து, உணர்ந்து உதவி செய்தார். அந்த தேவன் இன்றும் வாழ்கிறார். நம் வாழ்விலும் அனேக நன்மையான காரியங்களை செய்து முடிப்பார். உயிர்த்த இயேசு நம்முடைய குற்றங்களை மன்னித்து, நம்முடைய குற்றங்களை மன்னித்து, நம்மை தமக்கு சொந்தமாக்குவார்.

Go to Top