ஜெப அறை
"Alone with God"

பிரியமானவர்களே! ஜெப அறைக்கு உங்களை கரம் கூப்பி, வரவேற்கிறோம். “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே! எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்” - மத் 11:29, என்று கூறிய நம் மீட்பராம் இயேசு, நம் சுமைகளைத் தாங்கி, நமக்கு இளைப்பாறுதலைத் தர, இதோ இந்த ஜெப அறையில் காத்திருக்கிறார்.

மிகுந்த ஜெபத்தோடும், எதிர்பார்ப்போடும், இந்த அறைக்குள் நுழைவோம். இங்கே, நீங்கள் தனிமையில் இல்லை. இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும், இந்த அறையில், உங்களோடு, ஒரு கூட்டம் ஊழியர்கள், நோன்பிருந்து ஜெபிக்கிறார்கள். அவர்களது பலியாகும் ஜெபம், இந்த அறையிலிருந்து, விண்ணை நோக்கி, எழும்புகிறது.

தன்னைத் தாழ்த்தும் நீதிமானின் ஜெபம், முகில்களை எட்டும்; பதில் வாங்காமல் திரும்பாது - சீரா 35:17, தி.பா 34:17. அன்று ஆசாரக்கூடாரத்தை நிரப்பியிருந்த தேவப்பிரசன்னம், இந்த அறையை நிரப்பியுள்ளது. ஒரு நண்பரோடு பேசுவது போல, ஆண்டவர் உங்களோடு பேசுவார் - வி.ப 33:7-11.
இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்

உங்கள் உதடுகளின் பலியாகிய, ஸ்தோத்திரம் என்னும் பலி, விண்ணை நோக்கி எழும்பட்டும் - தி.பா 50:23; எபி 13:15 ஆண்டவர், துதிகளின் மத்தியில் வாசம் செய்கிறார் - தி.பா 22:3. இந்த அறையில், அன்னாளைப் போல, உங்கள் இதயத்தை கொட்டுங்கள் - 1சாமு 1:15. உங்கள் விண்ணப்பத்திற்கு நிச்சயம் பதில் கிடைக்கும். இந்த அறையிலிருந்து, நீங்கள் வெறுமனே போகமாட்டீர்கள்.

இதோ! விடுதலை அளிக்கும் “இறைவார்த்தைகள்” உங்களுக்கு “போதனையாக”, “வாக்குத்தத்தமாக”, “கட்டளையாக”, “சாட்சியமாக”, இறுதியில் “ஆசீராக” உங்கள் முன் படைக்கப்படுகின்றன. இந்த வார்த்தைகளை, “ஸ்தோத்திரத்தோடு” எடுத்துப் புசியுங்கள். விண்ணக மன்னாவை உண்டவர்களாய், விடுதலையோடு, இந்த அறையை விட்டு வெளியேறுவீர்கள்.
***
விவிலிய செய்தி
யூதித்தின் செய்தி- யூதி 8 :11-20, 24-27.

மூப்பர்கள் வந்தபோது, யூதித்து கூறியது: “பெத்தூலியாவில் வாழும் மக்களின் ஆளுநர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்: இன்று மக்களிடம் நீங்கள் கூறிய சொற்கள் முறையற்றவை. ஆண்டவர் தம் மனத்தை மாற்றி, குறித்த நாளுக்குள் நமக்கு உதவி அளிக்காவிடில், இந்த நகரை நம் எதிரிகளிடம் ஒப்புவிக்கப் போவதாக நீங்கள் உறுதி அளித்துக் கடவுள் மேல் ஆணையிட்டிருக்கிறீர்கள் - யூதி 8:11.

இன்று கடவுளைச் சோதிக்க நீங்கள் யார்? மனிதர் நடுவே கடவுளுக்கு மேலாக உங்களையே உயர்த்திக் கொள்ள, நீங்கள் யார்? - யூதி 8:12.

இப்போது, எல்லாம் வல்ல ஆண்டவரைச் சோதிக்கின்றீர்கள்; ஆனால் நீங்கள் எதையும் என்றும் அறிந்து கொள்ளப்போவதில்லை - யூதி 8:13.

மனித உள்ளத்தின் ஆழத்தையே நீங்கள் காண முடியாது; மனித மனம் நினைப்பதையே நீங்கள் உணர முடியாது. அவ்வாறிருக்க, இவற்றையெல்லாம் படைத்த கடவுளை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? அவருடைய திட்டத்தை, எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்? சகோதரர்களே, நம் கடவுளாகிய ஆண்டவரின் சினத்தை தூண்டி விடாதீர்கள் - யூதி 8:14.

இந்த ஐந்து நாட்களில், நமக்கு உதவி புரிய அவருக்கு விருப்பமில்லை என்றாலும், அவருக்கு விருப்பமான எந்த நேரத்திலும், நம்மை பாதுகாக்கவோ நம் பகைவர்கள் காண, நம்மை அழித்துவிடவோ அவருக்கு ஆற்றல் உண்டு - யூதி 8:15.

நம் கடவுளாகிய ஆண்டவரின் திட்டங்களுக்கு நிபந்தனை விதிக்காதீர்கள்; ஏனெனில் மனிதரை அச்சுறுத்துவது போலக் கடவுளை அச்சுறுத்த முடியாது. மானிடரை மன்றாட்டினால் மாற்றுவது போல் ஆண்டவரையும் மாற்ற முடியாது - யூதி 8:16.

எனவே, அவரிடமிருந்து மீட்பை எதிர்பார்ப்பவர்களாய், நமக்கு உதவி செய்ய அவரை மன்றாடுவோம். அவருக்கு விருப்பமானால், அவர் நமது மன்றாட்டுக்கு செவிசாய்ப்பார் - யூதி 8: 7

எனினும் நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். ஏனெனில், நம் மூதாதையரை அவர் சோதித்ததுபோல, நம்மையும் சோதிக்கிறார் - யூதி 8:25.

அவர் ஆபிரகாமுக்கு என்ன செய்தார் என்பதையும், ஈசாக்கை எவ்வாறு சோதித்தார் என்பதையும், யாக்கோபு தம் தாய்மாமன் லாபானின் ஆடுகளை வட மெசபத்தோமியாவில் மேய்த்துக்கொண்டிருந்த போது, அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பதையும் எண்ணிப்பாருங்கள் - யூதி 8:26.

ஆண்டவர் இவ்வாறு அவர்களின் உள்ளங்களைச் சோதித்தறியும் பொருட்டு அவர்களை நெருப்பில் புடமிட்டது போல, நம்மைப் புடமிடவில்லை; நம்மைப் பழிவாங்கவுமில்லை. ஆனால் தமக்கு நெருக்கமாய் உள்ளோரை எச்சரிக்கும்படி தண்டிக்கிறார் - யூதி 8:27.


சிந்தனை
அன்பரே! துன்ப நேரத்தில், பதட்டப்பட வேண்டாம்! ஆண்டவரின் விருப்பத்துக்கு, அனைத்தையும் கையளியுங்கள். அவர் எல்லாம் அறிவார். நம் ஆண்டவருக்குத் தெரியாமல் எதுவும் உங்களுக்கு வராது. மனத்திடன் கொள்ளுங்கள். ஆண்டவர் அருகாமையில் உள்ளார். ஆண்டவர் செயலாற்ற, காலம் தாருங்கள்; வெற்றி கைகூடும்.***
விவிலியச் சாட்சிகள்
நோவாவும், குடும்பமும் மீட்கப்பட்ட வரலாறு

A.நோவாவும் கடவுளும் - தொ.நூ 6:9-14

தம் காலத்தவருள், நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும், இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார் - தொநூ 6:9.

அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்: எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப் போகிறேன். ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன் - தொநூ 6 :13.

உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய்; அதில் அறைகள் அமைத்து, அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு - தொநூ 6 :14.

B.வெள்ளப்பெருக்கு அறிவிப்பு - தொ.நூ 6:17-22

நானோ, வானுலகின் கீழ் உயிருள்ள எல்லாவற்றையும் அழிப்பதற்காக, மண்ணுலகின் மேல் வெள்ளப்பெருக்கு வரச் செய்வேன். மண்ணுலகில் உள்ளவையெல்லாம் மடிந்துபோம் - தொநூ 6:17.

உன்னுடனோ, என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன். உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர் ஆகியோருடன், நீ பேழைக்குள் செல் - தொநூ 6 :18.

உன்னுடன் உயிர் பிழைத்துக்கொள்ளுமாறு, சதையுள்ள எல்லா உயிரினங்களிலிருந்தும், வகைக்கு இரண்டைப் பேழைக்குள் கொண்டு வா. அவை ஆணும் பெண்ணுமாக இருக்கட்டும் - தொநூ 6 :19.

கடவுள் தமக்கு கட்டளையிட்டபடியே, நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார் - தொநூ 6 :22.

C.வெள்ளப்பெருக்கு - தொ.நூ 7:6-7, 11-12,17,21-22,24.

வெள்ளப்பெருக்கிலிருந்து தப்புவதற்காக நோவா தம் புதல்வர், மனைவி, புதல்வரின் மனைவியர் ஆகியோருடன், பேழைக்குள் சென்றார் - தொநூ 7 :7.

நோவாவின் வாழ்க்கையின் அறுநூறாம் ஆண்டின், இரண்டாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று, பேராழத்தின் ஊற்றுகள் எல்லாம் பீறிட்டெழுந்தன. வானங்களின் மதகுகள் திறக்கப்பட்டன - தொநூ 7 :11.

நாற்பது பகலும், நாற்பது இரவும், மண்ணுலகில் பெருமழை பெய்தது - தொநூ 7 :12.

நிலத்தில் ஊர்வன, பறவைகள், கால்நடைகள், காட்டு விலங்குகள், நிலத்தில் தவழ்வன, மனிதர் அனைவர் ஆகிய சதையுள்ள உயிரினங்கள் அனைத்தும் மாண்டன - தொநூ 7 :21.

நூற்றைம்பது நாள்களாக மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகிற்று - தொநூ 7 :24.

D.நோவாவும் குடும்பமும் காப்பாற்றப்பட்டது - தொ.நூ 8:1-2,18-20 .

கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த, எல்லாக் காட்டு விலங்குகள், கால்நடைகள் அனைத்தையும் நினைவுகூர்ந்தார். ஆகவே மண்ணுலகின் மீது, காற்று வீசச் செய்தார். வெள்ளம் தணியத் தொடங்கியது - தொநூ 8 :1.

நோவாவும் அவர் புதல்வரும், அவர் மனைவியும் அவர் புதல்வரின் மனைவியரும், அவருடன் வெளியே வந்தனர் - தொநூ 8 :18.

அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி, அதன்மேல் எல்லா வகைத் தக்க விலங்குகள், தக்க பறவைகளிலிருந்து எடுக்கப்பட்டவற்றை எரிபலியாகச் செலுத்தினார் - தொநூ 8 :20.

E. கடவுளின் ஆசீர் - தொ.நூ 9:1,2.

கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள் - தொநூ 9 :1.

மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும், உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன - தொநூ 9 :2.


சிந்தனை

அன்பரே! பார்த்தீர்களா! பிரளயமே வந்தாலும், கடவுள், தன் அன்பர்களை பொதிந்து காப்பார். உங்களைச் சுற்றி எந்த கேடும் வரும் முன்பே, உங்களைக் காப்பாற்ற, கடவுள் வழி தேடுகிறார். உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பம், உங்கள் உடமைகள், உங்களை சார்ந்த அனைத்தையும், இரக்கமுள்ள கடவுள், உங்கள் பொருட்டு காப்பாற்றுவார். நேற்று நோவாவுக்குச் செய்ததை, இன்று உங்களுக்கும் செய்ய, நல்ல ஆண்டவர் காத்திருக்கிறார்.***
விவிலிய கட்டளைகள்
1. முதலில் போய், உன் சகோதரனிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - மத் 5 :24.
2. உங்கள் எதிரியோடு, வழியிலேயே, விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள் - மத் 5 :25.
3. உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள் - மத் 5 :42.
4. உங்கள் பகைவரிடமும், அன்பு கூருங்கள் - மத் 5 :44.
5. உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் - மத் 5 :44.
6. பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள் - மத் 7:1.
7. உங்கள் சகோதரன் குற்றம் செய்தால், குற்றத்தை எடுத்துக்காட்டி எச்சரி. செவிசாய்க்காவிடில், திருச்சபையிடம் ஒப்படை - மத் 18 :15-16.
8. எழுபது தடவை ஏழுமுறை மன்னியுங்கள் - மத் 18 :22.

சிந்தனை

அன்பரே! ஆண்டவரது குரலைக் கேட்போமா, “இன்று உனக்கு விதிக்கும், கட்டளைகள் அனைத்தையும் கடைபிடிப்பதில் கருத்தாயிரு. அப்பொழுது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்துக்கும் மேலாக, ஆண்டவர் உன்னை உயர்த்துவார். உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு செவிசாய்த்தால், அனைத்து ஆசிகளும், உன்மேல் வந்து, உன்னில் நிலைக்கும்”- இ.ச 28:1,2. இந்த வார்த்தையின்படியே, உங்களுக்கும் ஆகும்.***
விவிலிய வேண்டுதல்
விழுந்து போன வாழ்வை, மீண்டும் கட்டி எழுப்ப, ஆண்டவரின் உதவி வேண்டி, தானியேல் செய்த ஜெபம் - தானி 9:3-19.

நான் நோன்பிருந்து, சாக்கு உடை அணிந்து சாம்பலில் அமர்ந்து, என் தலைவராகிய கடவுளிடம் திரும்பி, மன்றாடி வேண்டிக் கொண்டேன் - தானி 9:3.

என் கடவுளாகிய ஆண்டவர்முன், என் பாவங்களை அறிக்கையிட்டு, நான் மன்றாடியது: “என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு, உம் கட்டளைகளின்படி, நடப்பவர்களுடன், நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து, அவர்களுக்குப் பேரன்பு காட்டுகிறீர் ! - தானி 9:4.

நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து, உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும், நீதிநெறிகளையும் கைவிட்டோம் - தானி 9:5.

எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில், இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்து நின்றோம் - தானி 9:9.

எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம், தம் திருச்சட்டங்களை அளித்து, அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார் – தானி 9:10.

நாங்களோ அவரது குரலொலியை ஏற்கவில்லை. இஸ்ராயேலர் யாவரும், உமது திருச்சட்டத்தை மீறி உம் குரலுக்குப் பணிய மறுத்து, விலகிச் சென்றனர். கடவுளின் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடி, சாபமும் கேடும், எங்கள் தலைமேல் கொட்டப்பட்டன. ஏனெனில், நாங்கள் அவருக்கு எதிராகப் பாவம் செய்தோம் - தானி 9:11.

ஆனால், எம் தலைவரே! உம்முடைய நீதிச் செயல்களுக்கேற்ப உமது நகரமும் உமது திருமலையுமாகிய எருசலேமைவிட்டு, உம் சினமும் சீற்றமும் விலகுவதாக! ஏனெனில் எங்கள் பாவங்கள், எங்கள் தந்தையரின் கொடிய செயல்களின் காரணமாக, எருசலேமும் உம் மக்களும், எங்களைச் சுற்றி வாழும் மக்களிடையே நிந்தைப் பொருளாக மாறிவிட்டனர் - தானி 9:16

ஆகையால், எங்கள் கடவுளே! இப்பொழுது உம் அடியானின் வேண்டுதலையும், விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொள்ளும். பாழாய் கிடக்கிற உமது தூயகத்தின்மீது, தலைவராகிய உம்மை முன்னிட்டே உமது முகத்தை ஒளிரச் செய்வீராக! - தானி 9:17.

என் கடவுளே! செவிசாய்த்துக் கேட்டருளும்; உம் கண்களைத் திறந்து எங்கள் பாழிடங்களையும், உமது பெயர் தாங்கிய நகரையும் நோக்கியருளும். நாங்கள், எங்கள் நேர்மையை நம்பாமல், உமது பேரிரக்கத்தையே நம்பி, எங்கள் மன்றாட்டுக்களை உமது முன்னிலையில் சமர்ப்பிக்கிறோம் - தானி 9:18.

என் தலைவரே! கேளும் என் தலைவரே! மன்னித்தருளும்; என் தலைவரே! செவிகொடுத்து செயலாற்றும்; என் கடவுளே! உம்மை முன்னிட்டு காலம் தாழ்த்தாதேயும்; ஏனெனில் உமது நகரமும் உம் மக்களும், உமது பெயரையே தாங்கியுள்ளனர் - தானி 9:19.

சிந்தனை

அன்பரே! இதோ ஆண்டவர் கூறுகிறார்! “என்னுடைய பிள்ளைகள், அல்லும் பகலும், என்னை நோக்கி கூக்குரலிடும்போது, நான் அவர்களுக்கு, செவிசாய்க்க, காலம் தாழ்த்துவேனா? இல்லை! விரைவாகவே அவர்கள் ஜெபத்தைக் கேட்பேன்” - லூக் 18:7,8. நீங்கள் என்பெயரால் கேட்பதெல்லாம், நான் செய்வேன் - யோவா 14:13,14, என்று சொன்ன ஆண்டவர், உங்கள் ஜெபத்திற்கு பதில் தருகிறார்.***
விவிலிய வாக்குத்தத்தங்கள்

1. உன் கடவுளும் ஆண்டவருமான நான், நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் - யோசு 1:9.
2. நான் உனக்கு வலிமை அளிப்பேன் - எசா 41:10.

3. உன்னை உருவாக்கிய நானே, உன்னைத் தாங்குவேன் - எசா 46:4.
4. நான் உன்னை கட்டி எழுப்புவேனேயன்றி, அழித்தொழிக்கமாட்டேன் - எரே 42:10.
5. இன்று முதல், நான் உனக்கு ஆசி வழங்குவேன் - ஆகா 2:19.
6. ஏழையானதால் அஞ்சாதே! நீ பெரும் செல்வனாவாய் - தோபி 4:21.
7. உன் கண்ணீரின் நாட்கள் முடிந்து போகும் - எசா 60:20.
8. ஆண்டவர், உன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார் - தோபி 7:16.
9. ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம் - எசா 54:14.
10. துன்பத்திற்கு பதிலாக, இன்பத்தை அருள்வேன் - எரே 31:13.

சிந்தனை

பிரியமானவரே! ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசுவசித்தவர் பேறுபெற்றவர் - லூக் 1:45. ஆண்டவர் வாக்களித்ததை ஆபிரகாம் விசுவசித்தார்; அது அவருக்கு நீதியாயிற்று - தொ.நூ 15:6. நம் ஆண்டவர் சொன்ன சொல் மாறாதவர். இன்று அவர் கூறிய அனைத்தும், உங்களுக்கு நிச்சயம் கைகூடும்.***
விவிலிய ஆசீர்

1. அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார் - திபா 121 :3.
2. இதோ! இஸ்ராயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை - திபா 121 :4.
3. ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார் - திபா 121 :5
4. பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது - திபா 121 :6.

5. ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார் - திபா 121 :7.

6. நீர் போகும்போதும், உள்ளே வரும்போதும், இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார் - திபா 121 :8.

சிந்தனை

பிரியமானவரே! இரவும் பகலும் விழித்திருந்து காப்பவர், உங்களோடிருக்கிறார். உங்களுக்கு நல்லது செய்வதற்காகவே, அவர் போக்கிலும் வரத்திலும், கூட இருக்கிறார். இன்று, இந்த ஆசிகளெல்லாம், உங்களுக்குள் நிலைக்கும்.
Go to Top