ஆவிக்குரிய திருமண சடங்கு

CPM - Matrimony Rituale


I. வரவேற்பு (எழுந்து நிற்கவும்)

• மணமக்கள் உறவினரால் பவனியாக அழைத்துவரப்படுவர்.
• சபையில் விசுவாசிகள் எழுந்து நிற்பர்.
• பீடத்தில் இறை ஊழியர்கள் - ஆராதனைக்கு ஆயத்தமாக நிற்பர்.
• பாடல் குழுவினர், வருகைப்பாடல் பாடிக்கொண்டிருப்பர்.

• பீடத்தின் முன் மணமக்கள் வந்ததும், தலைமைப் பணியாளரோடு, மற்ற ஊழியர்கள் முன்சென்று, மணமக்களை பீடத்துக்கு அழைத்து வருவர்.
• மணமக்கள் அவர்களின் இருக்கைகளுக்கு அருகே வந்து நின்றுகொண்டிருப்பர்.

II. ஆயத்த வழிபாடு (எழுந்து நிற்கவும்)

1. பொது மனஸ்தாப வழிபாடு:

1. முன்னுரை
2. பொது மனஸ்தாப வழிபாட்டுக்கான அழைப்பு
3. சபையை, வழிபாட்டுக்குத் தகுதிப்படுத்தும், பொது மனஸ்தாப செபம் ஏறெடுக்கப்படுகிறது.
4. பொருத்தமான மனஸ்தாபப்பாடல்.

பாடல் பல்லவி

பொறுத்தருளும் பொறுத்தருளும் பொறுத்தருளும் தேவா
பாவ உடல் சுமக்கின்றேன் பெலவீனன் தேவா – 2
2. மணமக்கள் மனஸ்தாப வழிபாடு:
மணமகன், மணமகள், இருவரும், பீடத்தின் இருபக்கமும், ஜெபத்துக்கு ஆயத்தமாய் நிற்கிறார்கள்.
மணமகனின் மனஸ்தாப ஜெபம்:

இரக்கமும், தயவும், பேரன்பும், நிறைந்த கடவுளே! உம்மை துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன். என் பாவங்களை போக்கும், தேவாட்டுக்குட்டியே! இயேசுவே ! உம்மை ஆராதிக்கிறேன்.

என் குற்றங்களை எல்லாம், பொறுத்துக்கொள்ளும் ஐயா ! நான் உமக்கு முன்பாகவும், வானகத் தந்தைக்கு எதிராகவும், பாவங்கள் பல செய்தேன். என்னை பொறுத்துக் கொள்ளும். ஆண்டவரே ! ஆயிரம் தலைமுறைக்கும் இரக்கம் காட்டுகிற தகப்பனே, என் மீதும் இரங்கி, என் குற்றங்களை எல்லாம் மன்னித்து, என் திருமண வாழ்வுக்கு என்னை ஆயத்தப்படுத்தும்.

என் சொந்த பெலத்தையோ, நன்மைத்தனங்களையோ நம்பி அல்ல, உம் சுத்த கிருபையை நம்பியே, நான் மண வாழ்வுக்குள், காலடி எடுத்து வைக்கிறேன். சாறாளையும், தோபியையும், பரிசுத்தப்படுத்தி, தீமையை அகற்றி, ஒரு குடும்ப வாழ்வுக்கு ஆயத்தப்படுத்தியது போல், எனக்கும் செய்யுமய்யா.


ஆண்டவரே இரக்கமாயிரும் !
கிறிஸ்துவே இரக்கமாயிரும் !!
ஆண்டவரே இரக்கமாயிரும் !!!

• சபையார் ஸ்தோத்திர ஜெபம் செய்வர்

பாடல் பல்லவி

தகுதிப்படுத்தும் தேவா – என்னை
தகுதிப்படுத்தும் தேவா
உம் திருவுள்ளத்தை நான் நிறைவேற்ற – 2
உம் கிருபையால் என்னை நிரப்பும் - 2


மணமகளின் மனஸ்தாப ஜெபம்

பேரிரக்கத்தின் ஊற்றாகிய கடவுளே ! உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். என் பாவங்களைப் போக்க, கல்வாரியில் இரத்தம் சிந்தி, உயிர் விட்ட இயேசுவே, உம் திருப்பாதம் பணிந்து, உம்மை ஆராதிக்கிறேன்.

சிறுவயதிலிருந்து, இன்று வரை, நான் செய்த, என் குற்றங்களை எல்லாம், பொறுத்துக் கொள்ளும். இயேசுவே! என் சிந்தனையால், சொல்லால், செயலால், என் கடமைகளைத் தவறியதால், நான் பாவங்கள், பல செய்தேன். அப்பா என்னை மன்னித்து, ஏற்றுக் கொள்ளும். உம் திரு இரத்தத்தால், என்னைக் கழுவி பரிசுத்தமாக்கும்.

அப்பா, உம் கிருபையை மட்டுமே நம்பி, என் திருமண வாழ்வுக்கு, காலடி எடுத்து வைக்கிறேன். என் பாவங்களைப் பொறுத்து, என்னை இப்புது வாழ்வுக்கு ஆயத்தப்படுத்தும். கர்த்தாவே, உம்மை விசுவசித்து வாழ்ந்த எஸ்தர் ராணிக்கும், ஒரு மகிமையான வாழ்வைத் தந்தீரே ! அவ்வண்ணமே, தகுதியற்ற உம் அடியாளாகிய என்னையும், உம் இரத்தத்தால் தகுதிப்படுத்தி, ஒரு மண வாழ்வுக்கு என்னை உயர்த்தும்.

ஆண்டவரே இரக்கமாயிரும் !
கிறிஸ்துவே இரக்கமாயிரும் !!
ஆண்டவரே இரக்கமாயிரும் !!!

• சபையார் ஸ்தோத்திர ஜெபம் செய்வர்

பாடல் பல்லவி

தகுதிப்படுத்தும் தேவா – என்னை
தகுதிப்படுத்தும் தேவா
உம் திருவுள்ளத்தை நான் நிறைவேற்ற – 2
உம் கிருபையால் என்னை நிரப்பும் - 2

பாவமன்னிப்பு ஜெபம் :

திருப்பணியாளர்:

இரக்கம் மிகுந்த தந்தையாகிய இறைவன்! தம்முடைய பாடுகளாலும், மரணத்தினாலும், உலகத்தை மீட்டு இரட்சித்த இறைவன் ! நமக்கு அருளும், சமாதானமும் தந்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நித்திய வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக !

சபையார் – ஆமென்

சபை ஜெபம்
( யாராவது ஒருவர். அல்லது புத்தகத்தில் உள்ளபடி)

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, எங்களை மீட்டு இரட்சிக்க வந்த, உம் திருக்குமாரனோடு, நாங்கள் மணவாட்டிகளாகும், உறவைப் பெற்றுள்ளோம்.

இவ்வுலக வாழ்விலும், நாங்கள் மண உறவு கொண்டு வாழ, ஆதாம்-ஏவாளை, ஆபிரகாம்-சாராளை, ஈசாக்கு- ரபேக்காளை, ஆசீர்வதித்தீர்.

கானாவூர் திருமண விழாவில், கலந்து கொண்டு, அத்திருமண நாளை குறை நீக்கி, நிறைவுள்ளதாக்கினீர்.

இன்று திருமண வாழ்வில் இணைக்கப் பெறவிருக்கும், எங்கள் பிள்ளைகளையும், உம் அன்பினால் இணைத்து, ஆவியின் கனிகளால் பிணைத்து, உம் வார்த்தைகளால், இதயங்களை நிறைத்து, வேதம் போற்றும், மணமக்களாக, மாற்றுவீராக... உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில், இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் சுதனுமாகிய இயேசு கிறஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

சபையார் – ஆமென்

III. இறை அனுபவ வழிபாடு

1. இறை வார்த்தை அனுபவம்

சிந்தனை:

1. ஆவிக்குரிய மணமக்கள் இருவரும், தம் வாழ்நாளெல்லாம் - “ஒரே கட்டுப்பாட்டில்” இருக்க வேண்டியவர்கள்.
2. அவர்களைக் கட்டுப்படுத்தும் அந்த இறை ஆற்றல் எது?
3. அவர்களை கட்டுப்படுத்தும் இறை ஆற்றல், – “இறைவார்த்தையே”.
4. விசுவாசத் தம்பதியர், ஏற்கனவே, “ஞானஸ்நான உடன்படிக்கையால்” இறை வார்த்தைக்கு கட்டுப்பட்டவர்கள்.
5. இனி அவர்கள் இந்த “உடன்படிக்கையை” நாள் தோறும், புதுப்பித்து வாழ வேண்டும்.

வசனம்:

• இயேசுவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டிருப்பீர்களாக – திப 20:32.
• திருச்சட்டத்தை கடைபிடிப்போர், தங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்துகின்றார் - சீரா21:11.
• உங்களை என் உடன்படிக்கையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் - எசே 20:37.
• ஒரே நோக்கம் - ச.உ 12:13, ஒரே கட்டுபாடு திப 20:32, ஒரே கடவுள், ஒரே ஆண்டவர், ஒரே ஆவி, ஒரே உடல், ஒரே மனம், ஒரே விசுவாசம், ஒரே திருமுழுக்கு – எபே 4:4,5 – கொண்டு வாழ்பவர்கள்,
• குடும்பத்தில் இணைந்து வாழ்வது, எவ்வளவோ எளிதும், இனிமையும், ஆனந்தமும், நிறைவுமாகும்.

• இந்த மன உணர்வுகளோடு, மணமக்கள், தங்கள் ஞானஸ்நான உடன்படிக்கையை புதுப்பிக்கும் வண்ணம், அவர்கள் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் பைபிளின்மேல் கரங்களை வைத்து செபிப்பார்கள்.

ஒரு ஸ்டூளில், பைபிள் வைக்கப்பட்டிருக்கும். அதன் முன் மணமக்கள் முழங்கால் படியிட்டு, கரங்களை பைபிளில் வைத்து ஜெபிப்பர்.
• திருப்பணியாளர் ஜெபத்தை வழிநடத்துவார்.
• இறுதியில் - பாடல்
பாடல் பல்லவி
தேவா உந்தன் திருவசனம் தியானிக்க வேண்டும்
அந்த வசனத்தை நான் காலமெல்லாம் வாழ்ந்திட வேண்டும்

2. இறை ஆவி அனுபவம்:
சிந்தனை – வசனம்:

• “இறைவார்த்தைக்கு” ஒருவர் கட்டுப்படும்போது, அவருக்குள் ஆவியானவருடைய கிரியை, பெலத்த வல்லமையோடு செயலாற்றும்.
- மரியாளுக்கு – லூக் 1:28-38.
- கொர்னேலியுவின் வீட்டில் இருந்தவர்களுக்கு – திப 10:44.
• மணமக்களின் குடும்பவாழ்வில், ஆவியானவரே அவர்களை, எல்லா சூழ்நிலையிலும் ஐக்கியப்படுத்தும் தேவன் - 2கொரி 13:13.
• ஆவியின் ஏவுதலின்படி வாழவும், ஆவியின் துணையோடு வாழவும், ஆவியானவர்காட்டும் வழியில் நடக்கவும் - (கலா 5:16,18,25) ஆவியானவரே மணமக்களை பயிற்றுவிக்கிறார் - 1யோவா 2:20,2 7.
• அபிஷேகத்தின் வழியாக, தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டு, கடவுளின் பிள்ளைகள் ஆன மணமக்கள், பெற்றுக்கொண்ட ஆவியானவரோடு, மீண்டும் புது உறவு கொள்ளும் வழிபாடு இது – உரோ 12:1-5.

பொருத்தமான – பாடல்.

என்னை ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே
மணமக்கள் எழுந்து நின்று, கரங்களை உயர்த்தி, பரவசத்திலே தேவனை துதித்து ஆராதிக்கின்றனர்.


•சபையாரும் சேர்ந்து செபிப்பர்.
IV.இறை வார்த்தை வழிபாடு
(எல்லாரும் அமர்ந்திருக்கவும்)
A. செய்திப்பகுதி:

அருட்செய்தி I – “குடும்ப அன்பு”

1. வாசகம் : எபே 5:21-33
2. சிந்தனை: (சுருக்கமாக)

ஒரு முறை, ஒரு நாட்டை, பகை அரசன் ஒருவன், படைகளோடு வந்து முற்றுகையிட்டான். இதைப்பார்த்த அந்த நாட்டு அரசனும், மக்களும், பயந்து நடுங்கினார்கள். பகை அரசன், தங்கள் கோட்டையை தகர்த்து, எந்த நேரமும், உள்ளே புகுந்து, தங்களை கொல்லுவான் என்று, கதி கலங்கினர்.

ஆனால், பகை அரசன், அவற்றை உடனே செய்யவில்லை. அவனிடம், கொஞ்சம் இரக்க குணமும் இருந்தது. அவன் அந்த நாட்டிலுள்ள பெண்கள்மீது, இரக்கம் கொண்டான். எல்லாரோடும், பெண்களையும் அழிக்க அவன் விரும்பவில்லை.

எனவே, பகை அரசன், முற்றுகையிட்ட நாட்டு மன்னனுக்கு, ஒரு தூது அனுப்பினான்.

“இந்த நாட்டிலுள்ள, எல்லா பெண்களையும், நான் விடுதலை செய்கிறேன். அவர்கள், கோட்டைகளை விட்டு வெளியேற நான் அனுமதி அளிக்கிறேன். மேலும் ஒவ்வொரு பெண்ணும், தங்களுக்கு, மிகவும் பிரியமான ஒரு பொக்கிஷத்தையும் கூட, எடுத்துச் செல்லலாம்”.

இந்த அறிவிப்பு, எல்லா மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. பகை அரசன் தான் அறிவித்தபடியே, ஒரு வாரத்துக்குப் பின்பு, கோட்டைவாயிலை உடைத்து திறந்தான்.

அவன் உள்ளே பார்த்த போது, அந்த நாட்டிலுள்ள பெண்களெல்லாம், கோட்டைவாதிலுக்கு முன்பு, கூடிநிற்கக் கண்டான். அவன் சொல்லியபடியே, அந்த நாட்டுப் பெண்கள், தாங்கள் எடுத்துக்கொண்ட பொருளோடு வெளியேற உத்தரவிட்டான்.

அவ்வண்ணமே, அரசி தொடங்கி, எல்லா பெண்களும் தங்கள் தலையில், பெரிய பெட்டி ஒன்றை தூக்கிக் கொண்டு வெளியேறத் தொடங்கினர்.

சிறிது நேரம் தாண்டி, அரசன் இதைப் பார்வையிட வந்தான். அவன் பார்க்கும் போது, எல்லா பெண்கள் தலையிலும், ஒரு பெரிய பெட்டி இருப்பதைக் கண்டான். இந்த பெட்டிகளில், என்னதான் இருக்கும் என்று, அரசன் அறிய விரும்பினான். எனவே, ஒரு பெண்ணைக் கூப்பிட்டு, அவள் கொண்டு சென்ற பெட்டியில், என்ன இருக்கிறது என்று பார்க்க, பெட்டியைத் திறந்தான்.

அப்போது, அந்த பெட்டிக்குள் ஒர் ஆடவன் இருந்தான். அரசனுக்கு வியப்பாக இருந்நது! “ஏன் இப்படி செய்தாய்?” என்று அவளிடம் அரசன் கேட்டான். அப்போது அந்தப் பெண், “நான் விரும்பும், மேலான பொக்கிஷம் இந்த ஆடவனே” என்றார்.

அப்படியே எல்லா பெட்டியையும் திறக்கும் போது, அவற்றில், ஒவ்வொரு ஆடவன் இருப்பதை பகை அரசன் கண்டான். அவ்வண்ணமே, அரசியின் பெட்டியை திறந்த போது, அதற்குள், அந்நாட்டு அரசன் இருப்பதைக் கண்டான்.

பகை அரசன் அப்படியே வாய்பொத்தி நின்றான். அந்த நாட்டுப் பெண்கள், தங்கள் வீட்டு ஆடவர் மேல், எவ்வளவு பற்று வைத்திருந்தார்கள் என்பதை உணர்ந்தான்.

அந்த நாட்டின் குடும்பங்களில், “அன்பு” இருந்தது. ஆடவர், தங்கள் பெண்களை மதித்து, அன்பு செய்தனர். எனவே, பெண்கள் தங்கள் ஆடவரை, தங்கள் சொத்தாகவே எண்ணி, போற்றி வந்தனர். அரசன், தன் அரண்மனையில், அன்பை வளர்த்திருந்தார். அரசனும், அரசியும், ஒருவருக்கொருவர், அன்பு காட்டுவதில், மக்கள் முன், முன் மாதிரியாக இருந்தார்கள்.

குடும்பங்களில், ஒருவருக்கொருவர், “அன்பை” வளர்த்த, அந்த நாட்டையும், அதன் மக்களையும் எண்ணி, பகை அரசன் அச்சமுற்றான்.

காரணம், “அன்பே” கடவுள். அன்பு இருக்கின்ற குடும்பத்திலும் நாட்டிலும், “கடவுள்” இருக்கிறார். கடவுள் இருக்கின்ற நாட்டை, பகைவன் வெல்ல முடியாது. கடவுள் அந்த மக்களுக்காக போர் செய்வார். கடவுளை எதிர்த்து, யாரும் வெற்றி பெற முடியாது – யூதித் 5:17,18,21.

எனவே, அந்த நாட்டை எதிர்ப்பது, விவேகமல்ல என்று எண்ணி, அந்த நாட்டுக்கும், மக்களுக்கும், எந்த தீங்கும் செய்யாது, பகை அரசன் தனது நாடு திரும்பினான்.

அன்பை வளர்த்த, அரசனும், மக்களும், தங்கள் உயிர் காத்த கடவுளை (அன்பை) எண்ணி, அக்களித்து விருந்து கொண்டாடினர்.

ஆம் பிரியமானவர்களே! மிருகங்களையும், மரங்களையும் வீட்டில் வளர்க்கும் நாம், கூடவே, அன்பையும் வளர்ப்போம். அன்பு, ஆபத்து நாளில், நம் உயிரைக் காக்கும்.

“ஸ்னேக கோட்டைக்குள்” வாழும் குடும்பத்துக்குள், “அலகை” நுழைய முடியாது. காரணம், அங்கே “கடவுள் வாழ்கிறார்”.

“கடவுள் நம் சார்பில் இருக்கும் போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய், யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்?” – உரோ 8:31-34.

பொருத்தமான – பாடல்.

சுமை தாங்கி இயேசு சுமக்கின்ற போது
சுமைகளை நீ ஏன் சுமந்திட வேண்டும்
இமை மூடாது உன்னை காக்கின்ற தேவன்
இருக்கையிலே நீ கலங்குவதேன்
அருட்செய்தி II – “குடும்ப பணிவு”

1. வாசகம் - மத் 19:1-9.
2. சிந்தனை: (சுருக்கமாக)

ஒருமுறை, ஒர் ஆவிக்குரிய குடும்பத்தில், காலையில், கணவன் குடும்ப பணிகளை முடித்துவிட்டு, அலுவலகம் செல்வதற்கு ஆயத்தமாக, வீட்டின் நடு அறையில் அமர்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில், உள்ளே, சமயலறையில் வேலை செய்து கொண்டிருந்த மனைவியிடம், குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டார். மனைவியும் ஒரு கண்ணாடி கப்பில், தண்ணீர் கொண்டு வந்து, அவர் அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு, மீண்டும் சமையல் அறைக்குச் சென்றார்.

கணவன், பத்திரிகை படிப்பதிலேயே, கவனமாயிருந்து விட்டார். அப்போது, அதே அறையில், அவர்களின் சிறிய மகன், பந்து ஒன்றை வைத்து, விளையாடிக் கொண்டிருந்தான்.

திடீரென, அவன் விளையாடிய பந்தானது, தண்ணீர் கப்பில் மோதி, கப்பு தரையில் விழுந்து உடைந்து போனது. அந்த சத்தத்தைக் கேட்டதும் வீடே அதிர்ந்தது.

அப்போது, மனைவி சமயலறையிலிருந்து ஒடி வந்து, தன் கணவனிடம், “என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள், நான் அவசரப்பட்டுவிட்டேன். நான் நின்று நீங்கள் தண்ணீரைக் குடித்ததும், கப்பை வாங்கிச் சென்றிருந்தால், இது நிகழ்ந்திருக்காது, நான்தான் தவறு செய்தேன்” என்று, பணிவோடு கூறினாள்.

அதைக் கேட்டதும், கணவன், “அப்படி இல்லையம்மா” நான்தான் தவறு செய்தேன். நான் உடனே தண்ணீரைக் குடித்துவிட்டு, கப்பை உன்னிடம் தந்திருந்தால், இப்படி நடந்திருக்காது, என்னைப் பொறுத்துக்கொள்” என்று அமைதியோடு கூறினார்.

இருவரும் பேசியதைப் பார்த்துக்கொண்டிருந்த, மகன் ஒடிவந்து, “ அம்மாவைக் கட்டிப்பிடித்து, அம்மா நான்தான் தப்பு செய்தேன். நான் வெளியே போய் விளையாடியிருந்தால், இது நடந்திருக்காது. அம்மா, அப்பா, இருவரும் என்னை மன்னியுங்கள்”. என்று கெஞ்சி வேண்டினான்.

இருவரும் குழந்தையை அரவணைத்துக் கொண்டார்கள். சிறிது நேரத்தில், அந்த வீட்டில் தேவ சமாதானம் தங்கியது. மகிழ்ச்சியும், அக்களிப்பும் நிறைந்தது. குற்றம் பாராமைக்கும், பணிவுக்கும் முந்திக் கொள்ளும் அந்த ஆவிக்குரிய குடும்பத்தை, தீமை ஜெயம் கொள்ள முடியாது.

அவ்வாறே, நமது ஆவிக்குரிய குடும்பங்களும், கிறிஸ்துவின் அன்புக்கு சாட்சியாகத் திகழ, உங்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறோம். ஆமென்.

பொருத்தமான – பாடல்.

ஓரோ நிமிஷமும் தெய்வமே
நின் ஸ்துதி பாடிடும் ஞான்
ஓரோ ஸ்வாசத்திலும் தெய்வமே
நின் நாமம் வாழ்த்திடும் ஞான்

அருட்செய்தி III – “குடும்பத்தில் ஒருவருக்கொருவர்”

1. வாசகம் - மத் 7:24,25.
2. சிந்தனை: (சுருக்கமாக)

ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது

ஒருவர் ஒருவரை அன்பு செய்யுங்கள்:
1. ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டால், கடவுள் நம்மோடு இணைந்திருப்பார் - 1யோவா 4:12.
2. ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக. ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது – 1யோவான் 4:7.
3. தூய உள்ளத்தோடு, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள் - 1பேது 1:22.
4. நான் உங்களுக்கு அன்பு செய்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள் - யோவா 13:34.
5. ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தினால், நீங்கள் என் சீடர்கள் என்று எல்லாரும் அறிந்து கொள்வார் - யோவா 13:35.

ஒருவர் ஒருவரை மன்னியுங்கள்:
1. ஒருவரை ஒருவர் மன்னியுங்கள் - எபே 4:32, லூக் 6:7.
2. பரலோகப்பிதா உங்களை மன்னிப்பதுபோல, நீங்களும் பிறரை மன்னியுங்கள் - மத் 6:14,15, கொலோ 3:13.
3. மன்னியுங்கள், மன்னிக்கப்படுவீர்கள் - லூக் 6:37.
4. ஏழுமுறை, எழுபது முறை மன்னியுங்கள் - மத் 18:22.

ஒருவர் ஒருவரை பொறுத்துக் கொள்ளுங்கள்:
1. ஒருவர் ஒருவரை பொறுத்துக் கொள்ளுங்கள் - கொலோ 3:13.
2. முழு மனத்தாழ்மையோடும், கனிவோடும், பொறுமையோடும், ஒருவர் ஒருவரைத் தாங்குங்கள் - எபே 4:2.

ஒருவர் ஒருவரை தாங்குங்கள்:
1. பெற்றுக்கொண்ட அருட்கொடைகளைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள் - 1பேது 4:10.
2. ஒருவர் மற்றவரின் சுமைகளைத் தாங்குங்கள் - கலா 6:2.

ஒருவர் ஒருவரை ஊக்கமூட்டுங்கள்:
1. ஒன்று கூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோம் - எபி 10:25, 1தெச 5:11.
2. அன்பு செலுத்தவும், நற்செயல் புரியவும் ஒருவரை ஒருவர், தூண்டி எழுப்புவோம் - எபி 10:24.

ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடிருங்கள்:
1. ஒருவர் மற்றவரிடம், இரக்கமும், சகோதர அன்பும், பரிவுள்ளமும், மனத்தாழ்மையும் கொண்டிருங்கள் - 1பேது 3:8.
2. முழு மனத்தாழ்மையோடு ஒருவரை ஒருவர் தாங்குவோம் - எபே 4:2.

ஒருவருக்கொருவர் அறிவுறுத்துங்கள்:
1. ஒருவர், மற்றவரை அறிவுறுத்தக்கூடியவராயும் இருங்கள் - உரோ 15:14.
2. முழு ஞானத்தோடு, ஒருவருக்கொருவர் கற்பித்து, அறிவுரை கூறுங்கள் - கொலோ 3:16.
3. இறை வார்த்தைகளைச் சொல்லி, ஒருவருக்கொருவர் தேற்றுங்கள் - 1தெச 4:18.
4. நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள் - எபி 3:13.

ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள்:

ஒருவர் மற்றவருக்காக, இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது, குணமடைவீர்கள் - யாக் 5:16.


ஒருவருக்கொருவர் வளர்ச்சியடைய செய்யுங்கள்:
1. ஒருவர் மற்றவருக்கு, வளர்ச்சி தருவனவற்றையே செய்ய முயலுங்கள் - உரோ 14:19, 15:1,2.
2. ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள் - 1தெச 5:11.

ஒருவருக்கொருவர்:
1. ஒருவருக்கொருவர், நட்புறவு கொண்டிருப்போம் - 1யோவா 1:7
2. அன்பு முத்தம் கொடுத்து, ஒருவர் மற்றவரை வாழ்த்துவோம் - 1பேது 5:14.
3. ஒருவருக்கொருவர், பாவங்களை அறிக்கை செய்வோம் - யாக் 5:16.
4. உண்ணும் போது, ஒருவர் மற்றவருக்காக, காத்திருங்கள் - 1கொரி 11:33.
5. தூய முத்தம் கொடுத்து, ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள் - உரோ 16:6, 1கொரி 16:20, 2கொரி 13:12.
6. கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டது போல், நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளுங்கள் - உரோ 15:7.
7. ஒரு கன்னத்தில் அறைந்தால், மறுகன்னத்தைக் காட்டுங்கள் - மத் 5:39.
8. உங்கள் ஆண்டவரும், போதகருமாகிய நான், உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் ஒருவருடைய காலடிகளைக் கழுவ கடமைப்பட்டிருக்கிறீர்கள் - யோவா 13:14.
9. மனவலிமை கொண்டவர்கள், வலுவற்றவர்களின் குறைபாடுகளை தாங்கிக்கொள்ள, கடமைப்பட்டிருக்கிறோம் - உரோ 15:1.
10. பிறர் உங்களைவிட, மதிப்புக்குரியவர் என எண்ணுங்கள் - உரோ 12:10, பிலி 2:3.
11. நீங்கள் உங்களையே, அறிவாளிகள் எனக் கூறி பெருமிதம் கொள்ள வேண்டாம் - உரோ 12:16.
12. அடுத்தவருடைய நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு, அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள் - உரோ 15:2.

ஒருவருக்கொருவர் செய்யக்கூடாதது
1. ஒருவரை ஆதரித்து மற்றவரை எதிர்க்காதீர்கள் - 1கொரி 4:6.
2. நீங்கள் உங்களை மற்றவர்களைவிட உயர்ந்தவராக எண்ணாதீர்கள் - 1கொரி 4:7.
3. ஒருவர் மற்றவரிடம் எல்லையை மீறி செயல்படக்கூடாது – 2கொரி 10:16.
4. ஒருவருக்கொருவர், எரிச்சல் மூட்டாமலும், ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருங்கள் - கலா 5:26.
5. ஒருவர் மற்றவரை பழித்துரைக்க வேண்டாம் - யாக் 4:11.
6. தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதபடி, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர் - யாக் 5:9
7. முணுமுணுக்காமல் விருந்தோம்புங்கள் - 1பேது 4:9.
8. முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள் - பிலி 2:14.
9. உயர்வு மனப்பான்மைக் கொள்ளாமல், தாழ்நிலையில் உள்ளவர்களோடு, நன்கு பழகுங்கள் - உரோ 12:16.
10. நாம் ஒரு காலத்தில், காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாய், ஒருவர் ஒருவரை வெறுத்தோம் - தீத் 3:3.
11. எச்சரிக்கை! ஒருவரை ஒருவர் கடித்துக் குதறுவதை நிறுத்தாவிட்டால், ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள் - கலா 5:15.

பொருத்தமான – பாடல்.

உம்மைப் பாடாத நாட்களும் இல்லையே
உம்மைத் தேடாத நாட்களும் இல்லையே
உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை - 4


B. பாதம் கழுவுதல்:
1. முன்னுரை
2. பாதம் கழுவும் சடங்கு
3. பாதம் கழுவுவதற்கான பொருட்களை ஆயத்தம் செய்ய வேண்டும்.
4. சிந்தனை


5. சடங்கு

• இப்போது, மணமக்கள், தாங்கள் பெற்றுக்கொண்ட இறை அனுபவத்தை தங்கள் வாழ்வில் பிரதிபலிக்கும் வண்ணம், ஒருவர் ஒருவரின் பாதங்களை கழுவுகிறார்கள் - யோவா 13:1-11.

• முதலில் திருமுழுக்காலும், பின்பு திருவிருந்தாலும், இயேசுகிறிஸ்துவுடைய “உடலின் உறுப்புக்களாக மாறிய மணமக்களுக்கு, இயேசு, “தாழ்ச்சியின்” பாடத்தை கற்றுத்தருகிறார் - 1கொரி 12:13,27, யோவா 6:56.

• தம்முடைய உடலின் உறுப்பாக இருக்கும், தகுதியை ஒருவர் பெற, முதலில் “தாழ்ச்சியின்” பாடத்தை கற்று, கடைபிடிக்க வேண்டும். அதற்காகவே இயேசு, முதல் திருவிருந்தில், பாதம் கழுவும் அன்பை அறிமுகப்படுத்தினார் - மத் 11:29, யோவா 13:14,15.

1. மணமகன்:
• மணமகள் அமர்ந்திருக்க
• மணமகன் அவரின் பாதத்தைக் கழுவும் முன் கூறுவது.

“என் அன்புத் துணைவியான ஜெனிபர், நான் உங்களை, உங்கள் எல்லா குற்றம் குறைகளோடும், பெலவீனங்களோடும், என் இனிய மணவாட்டியாக ஏற்றுக்கொள்கிறேன். இதன் அடையாளமாக இப்போது உம் பாதங்களை கழுவுகிறேன் ”.

ஜெபம்:

“என் அன்பு இயேசுவே, இப்போது நான் பாதங்களைக் கழுவும், என் வாழ்க்கைத் துணைவியான, ஜெனிபரை, அவருடைய எல்லா குற்றம் குறைகளோடும், பெலவீனங்களோடும், நான் ஏற்றுக்கொள்கிறேன்”. ஆமென்.பாதங்களை கழுவி துடைக்கிறார்.
2. மணமகள்:
மணமகன் அமர்ந்திருக்க, மணமகள் அவரின் பாதத்தைக் கழுவும் முன் கூறுவது.

“என் அன்புத் துணைவரான ஜீன்பர் கிறிஸ்டோ, நான் உங்களை, உங்கள் எல்லா குற்றம் குறைகளோடும் , பெலவீனங்களோடும், ஏற்றுக்கொள்கிறேன். இதன் அடையாளமாக, இப்போது உங்கள் பாதங்களைக் கழுவுகிறேன்”.

“என் அன்பு இயேசுவே! இப்போது நான் பாதங்களைக் கழுவும் என் வாழ்க்கைத் துணைவரான, ஜீன்பர் கிறிஸ்டோவை, அவருடைய எல்லா, குற்றம் குறைகளோடும், பெலவீனங்களோடும் நான் ஏற்றுக்கொள்கிறேன் ”. ஆமென்.பொருத்தமான – பாடல்.

ஒருவர் ஒருவரின் பாதம் கழுவ
தாழ்ச்சி வேண்டும்
ஸ்னேகம் வேண்டும்
பரிசுத்தம் வேண்டும்
உம்மைப்போல் மாற வேண்டும்
இயேசுவே – 2
ஒருவர் ஒருவரின் பாதம் கழுவ
தாழ்ச்சி வேண்டும்

V. திருமணச் சடங்கு வழிபாடு
• சபையார் அமர்ந்திருப்பர் .
• மணமக்கள், பீடத்துக்கு முன்பாக வந்து நிற்பர்.
• மணமகளின் பெற்றோர், ஒவ்வொரு திருமறைநூலை, கொண்டு வந்து, தட்டில் வைப்பர்.
• மணமகனின் பெற்றோர், திருமாங்கல்யத்தை கொண்டு வந்து, மற்றொரு தட்டில் வைப்பர்.
• பின்பு அவர்கள், இரண்டு பக்கங்களிலும், நின்று கொண்டிருப்பர்.

1. முதலாவது, திருமறைநூல் மாற்றிக்கொள்ளும் சடங்கு.
2. இரண்டாவது, திருமாங்கல்யத்தை கட்டிக் கொள்ளும் சடங்கு.
திருப்பணியாளர் :-

அன்பார்ந்த இறை மக்களே ! திருமணச் சடங்கால், புது வாழ்வில் இணைக்கப்படவிருக்கும், இம்மணமக்களுக்காக, நாம் இப்போது ஜெபிக்கும் நேரம். இச்சடங்கு, இரண்டு முறைகளில் நடைபெறும்.

1. திருமறை நூல் மாற்றிக் கொள்ளும் சடங்கு

• மணமக்கள் பீடத்தை நோக்கி, முழங்காலில் நிற்பர்.
• திருமறைநூல் தட்டை, ஒருவர் மணமக்களுக்கு முன் தூக்கிப் பிடிப்பார்.
• திருப்பணியாளர் முன்னுரை கூறுவார். பின்பு,
• மணமக்கள் எழுந்து, ஒருவருக்கொருவர் முகம் பார்த்து நிற்பர்.
• மணமகன் திருமறை நூலை, கையில் எடுத்துக் கொள்வார்.
• மணமகள் முழங்காலில் நிற்பார்.
• மணமகன், திருமறைநூலை, மணமகளுக்கு நேராக, உயர்த்திப் பிடித்து, பின்வருமாறு கூறுவார்.

மணமகன்

என்னை அதிகம் அன்பு செய்து, என் வாழ்க்கை துணைவியாகவிருக்கும், என் அன்பு (ஜெனிபர்), நம் திருமண வாழ்வை, இந்த பரிசுத்த வேதம், உறுதி செய்வதாக. இந்த வேதம் காட்டும் வழியை நாம் பின்பற்றி, நம்முடைய இன்பத்திலும், துன்பத்திலும், இறை விருப்பத்துக்கு ஆமேன் சொல்வோமாக. நம் காலடிக்கு, இந்த வார்த்தையே விளக்காகவும், நம் பாதைக்கு, இத்திரு நூலே ஒளியாகவும், அமைவதாக.

யோசுவாவைப் போல, நம் குடும்ப வாழ்விலும், எல்லா சந்தர்ப்பங்களிலும், இவ்வேத நூலை, நம் கண்முன்னின்று அகற்றாமல், வாழ்வோமாக.


இத்திருநூலால், நம்மை இணைக்கும் மண வாழ்வை, எந்த மனித, உலக, சக்தியும், பிரிக்காமல் காப்பதாக. நம் மண ஒப்பந்த உடன்படிக்கையாக, இத்திருமறைநூலைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

திருமறைநூலை, மணமகளின் தலையில் வைத்துக் கொடுக்க, மணமகளும் அதனை, இருகைகளையும் பற்றி, வாங்கிக் கொள்கிறார்.


மணமகள்

என்னை அதிகம் அன்பு செய்து, என் வாழ்க்கை துணைவராக விருக்கும், என் அன்பு ( ஜீன்பர் கிறிஸ்டோ), நம் திருமண வாழ்வை, இந்த பரிசுத்த வேதம் உறுதிப்படுத்துவதாக. இந்த திருச்சட்ட நூலில் எழுதியுள்ள அனைத்தையும், நாம் இரவும் பகலும் தியானித்து, இதினின்று, இடமோ வலமோ திரும்பாமல், இதை முற்றும், கடைபிடித்து வாழ்வோமாக.

நாம் பாவம் செய்யாதவாறு, இத்திருச்சட்டத்தை, நம் இதயத்தில் இருத்திக் கொள்வோமாக. அன்னை மரியாளைப் போல, நம் வாழ்வின் எல்லா சந்தர்ப்பத்திலும், இறை விருப்பத்துக்கு அடிமைகளாக வாழ்வோமாக. நம் மண ஒப்பந்த உடன்படிக்கையாக, இத்திருமறைநூலை பெற்றுக் கொள்ளுங்கள்.

பாடல்.

வானகத்தந்தையே உம் திருசித்தம்
விண்ணகத்தை போல பூவில் ஆகட்டும்
உந்தன் சித்தம் செய்த உம் மகனைப் போல
இன்று நான் வருகிறேன் உம் சித்தம் செய்ய.

திருமறைநூலை, மணமகனின் தலையில் வைத்துக் கொடுக்க, அவரும் அதனை இருகைகளையும் பற்றி, வாங்கிக் கொள்கிறார்.


2. திருமாங்கல்யம் கட்டிக்கொள்ளும் சடங்கு
• தட்டிலிருக்கும், திருமாங்கல்யத்தை, திருப்பணியாளர் உயர்த்தி பிடிப்பார்.
• மக்கள் எல்லாரும், தம் கரங்களை திருமாங்கல்யத்தின் மீது நீட்டி, அதனை இறைவன் அர்ச்சிக்கும் படியாக ஜெபிப்பர்.
• திருப்பணியாளரும் ஜெபிப்பார்.

• பின்பு, மணமகன் எழுந்து நிற்பார்.
• மணமகள், முழங்காலில் நிற்பார்.
• திருப்பணியாளர், திருமாங்கல்யத்தை, மணமகனிடம் கொடுப்பார்.
• மணமகன், திருமாங்கல்யத்தை உயர்த்திப் பிடித்து,
• திருமண உடன்படிக்கை வார்த்தைகளை பரிமாறுவார்.
பாடல் பல்லவி

ஆசீர்வதியும் ஆசீர்வதியும் ஆசீர்வதியும் கர்த்தாவே – 2
தந்தை குமரன் ஆவியின் பெயரால்
ஆசீர்வதியும் கர்த்தாவே ஆசீர்வதியும் கர்த்தாவே

மணமகன்

என் அன்பு (ஜெனிபர்), இன்று நான் உங்களை, இறைப்பிரசன்னத்துக்கு முன்பாகவும், இறை மக்கள் முன்பாகவும், என் வாழ்க்கை துணைவியாக, மனதார ஏற்றுக் கொள்கிறேன்.

உங்கள் இன்பத்திலும், உங்கள் துன்பத்திலும், உங்கள் உடல் நலத்திலும், உங்கள் நோயிலும், உங்கள் உயர்விலும், உங்கள் தாழ்விலும், நான் உங்களுக்கு, பிரமாணிக்கமுள்ள வாழ்க்கைத் துணைவராய் இருந்து, உங்கள் வாழ்நாள் எல்லாம், உங்களை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

இந்த திருமாங்கல்யத்தை, நம்மை ஐக்கியப்படுத்தும் ஆவியானவர் தாமே அர்ச்சித்து, நம்மை நித்திய மணமக்களாக இணைப்பாராக.

மணமகன் திருமங்கல்யத்தை, மணமகளின் கழுத்தில் அணிவிக்கிறார்.
மணமகள்

என்றும் என் அன்புக்குரிய (ஜீன்பர் கிறிஸ்டோ), இன்று நான் உங்களை, இறைப்பிரசன்னத்துக்கு முன்பாகவும், இறை மக்கள் முன்பாகவும், என் வாழ்க்கைத் துணைவராக, மனதார ஏற்றுக் கொள்கிறேன்.

உங்கள் இன்பத்திலும், உங்கள் துன்பத்திலும், உங்கள் உடல் நலத்திலும், உங்கள் நோயிலும், உங்கள் உயர்விலும், உங்கள் தாழ்விலும், நான் உங்களுக்கு பிரமாணிக்கமுள்ள, வாழ்க்கைத் துணைவியாய் இருந்து, உங்கள் வாழ்நாள் எல்லாம், உங்களை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

இந்த திருமாங்கல்யத்தை, நம்மை ஐக்கியப்படுத்தும் ஆவியானவர் தாமே அர்ச்சித்து, நம்மை நித்திய மணமக்களாக இணைப்பாராக.3. மூப்பர்கள் ஆசீர் வழங்குதல்
1. முன்னுரை
2. மூப்பர்கள் வரிசையாக வந்து மணமக்களின் தலைகளில் கைகளை வைத்து ஆசீர் வழங்குவர். மணமக்கள் சபையை நோக்கி முழங்காலில் நிற்பர்.
3. ஒரு பாடல் பாடப்படுகின்றது

4. புது மணத்தம்பதியர் காணிக்கை வழிபாடு
1. முன்னுரை
2. மணமக்களும், அவர்கள் குடும்பத்தாரும், பலிபீடத்துக்கு காணிக்கைகளை ஏந்திவருவர் .
3. திருப்பணியாளர் அதை பெற்றுக்கொள்வார்.
4. காணிக்கைப்பாடல்
5. காணிக்கை மீது செபம்.

VI.இறுதி வழிபாடு
1. புதுமணத் தம்பதியர் நன்றி செபம்
மணமகன்

ஸ்தோத்திரம் பிதாவே, அப்பா உம்மை நன்றியோடு ஆராதிக்கிறேன். துதிக்கிறேன். இயேசுவே, இன்றைய நாளில், எங்கள் திருமணம், இந்த இடத்தில், ஆசீர்வாதமாய் நடந்து முடியச் செய்தீர் உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

அப்பா, நீர் எனக்குத் தந்த, பெற்றோர், அண்ணா, அண்ணி, அனைவரையும், ஆசீர்வதிக்கிறீரே உமக்கு நன்றி. இந்த திருமணத்தை, நல்ல முறையில் நடத்திய எல்லா பெரியவர்களுக்காகவும், உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

இயேசுவே, இந்த திருமணத்தை ஆசீர்வாதமாய் நடத்திய, கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் சபைக்காக, உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

அப்பா, நாங்கள் திருமண வாழ்வில், ஆவிக்குரிய பிள்ளைகளாக வாழ பயிற்சிகளைத் தந்த, எங்களுடைய சபைத்தலைவர், மற்றும் அருட்சகோதரிகளுக்காகவும், உமக்கு நன்றி. இயேசுவே, இத்திருமண விழாவில், எங்களை வாழ்த்தி ஜெபிக்க வந்த, அருட்தந்தையர், சபைப்போதகர்கள், ஊழியர்கள், அப்போஸ்தலர்கள், சபை மூப்பர்கள், விசுவாசிகள், நண்பர்கள், சொந்த பெந்தங்கள், உற்றார் உறவினர்கள், யாவரையும் ஆசீர்வதிக்கிறீர் உமக்கு நன்றி.

இயேசுவே, இன்று புதிதாக மணம் முடித்த, என்னுடைய வாழ்க்கைத் துணையை ஆசீர்வதியும். அவருடைய அப்பா அம்மாவை ஆசிர்வதியும். அவருடைய சகோதரனை ஆசீர்வதியும். அப்பா, எங்கள் திருமண வாழ்வையும், தொடர்ந்து ஆசீர்வதியும்.

துதி, கன, மகிமை யாவும் உமக்கே செலுத்துகின்றோம். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஜெபம் கேளும் நல்ல பிதாவே.ஆமென்.

மணமகள்

ஸ்தோத்திரம் பிதாவே, அப்பா உம்மை நன்றியோடு ஆராதிக்கிறேன். துதிக்கிறேன். இயேசுவே, இன்றைய நாளில், எங்கள் திருமணம், இந்த இடத்தில், ஆசீர்வாதமாய் நடந்து முடியச் செய்தீர் உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

அப்பா, நீர் எனக்குத் தந்த, அம்மா அப்பா, சகோதரனை, ஆசீர்வதிக்கிறீரே உமக்கு நன்றி. இந்த திருமணத்தை, நல்ல முறையில் நடத்திய எல்லா பெரியவர்களுக்காகவும், உமக்குநன்றி செலுத்துகின்றேன். இயேசுவே, இந்த திருமணத்தை ஆசீர்வாதமாய் நடத்தி தந்த, என் ஆவிக்குரிய சபைக்காக, உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

அப்பா, நாங்கள் திருமண வாழ்வில், ஆவிக்குரிய பிள்ளைகளாக என்றும் வாழ, பயிற்சிகளைத் தந்த, எங்களுடைய சபைத்தலைவர், மற்றும் அருட்சகோதரிகளுக்காகவும், உமக்கு நன்றி. இயேசுவே எங்கள் அழைப்பை ஏற்று, எங்களை வாழ்த்தி ஜெபிக்க வந்த, அருட்தந்தையர், சபைப்போதகர்கள், ஊழியர்கள், அப்போஸ்தலர்கள், சபை மூப்பர்கள், விசுவாசிகள், நண்பர்கள், சொந்த பெந்தங்கள், உற்றார் உறவினர்கள், யாவரையும் ஆசீர்வதிக்கிறீர் உமக்கு நன்றி.

இயேசுவே, இன்று புதிதாக மணம் முடித்த, என்னுடைய வாழ்க்கைத் துணைவரை ஆசீர்வதியும். அவருடைய அம்மாவை ஆசீர்வதியும். அவருடைய அண்ணாவையும், அண்ணியையும் ஆசீர்வதியும். எங்கள் மண வாழ்வையும் ஆசீர்வதீயும்.

துதி, கன, மகிமை யாவும் உமக்கே செலுத்துகின்றோம். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஜெபம் கேளும் நல்ல பிதாவே.ஆமென்.

VII. இறுதி ஆசீர்
1. அறிவிப்புகள்.
2. ஒருவர் செபித்து ஆசீர் வழங்குவார்
Go to Top